நவீன பஞ்சதந்திரக் கதை -19

மனுஷங்க மாறிட்டாங்க....

காக்கா ஸ்கூல் தொடங்கிவிட்டது.

அட, இதென்ன காக்கா ஸ்கூல் என்று யோசிக்கிறீர்களா?! தினமும் மாலை 5 மணிக்கு எல்லா காக்கைகளும் கூடு திரும்புவதற்கு முன்பு ஆங்காங்கே கொஞ்ச நேரம் மின்கம்பம், புளியமரம், அரசமரம், ஆலமரம் போன்ற இடங்களில் உட்கார்ந்து கொண்டு 'கா... கா'என கத்திக் கொண்டு இருக்குமே... அதுதான் இங்கு காக்கா ஸ்கூல்.

இதோ அரசமர பேருந்து நிலையத்தில் காக்கா ஸ்கூல் தொடங்கிவிட்டது. குஞ்சு காகம் முதல் வயதான காகங்கள் வரை அனைத்தும் ஆஜராகியிருந்தன. 'இன்னைக்கு டீச்சர் என்ன பாடம் நடத்துவாங்களோ...தெரியலையே?!'என்று குஞ்சு காகங்கள் எல்லாம் கா... கா... மொழியில் பேசிக்கொண்டு இருந்தன.

அப்போது வயதான அண்டங்காக்கா ஒன்று வந்து அரசமரத்தின் ஒரு கிளையில் அமர்ந்தது.

"நண்பர்களே, எல்லோரும் வந்து விட்டார்களா?" என்றது.

"தலைவரே, எல்லோரும் வந்துட்டாங்க... குழந்தைங்க ரொம்ப ஆர்வமா இருக்குதுங்க. சீக்கிரமா பாடத்தை ஆரம்பிங்க" என்றது இருட்டு நிற காக்கா.

"குழந்தைகளே, இன்னைக்கு நாம சுற்றுச்சூழல் பத்தி பேசப்போறோம். குறிப்பா மனுஷங்க சுற்றுச்சூழலை எப்படி கெடுத்துட்டு வர்றாங்கன்னு சொல்லப்போறேன். இதன் மூலம் எதிர்காலத்துல நீங்க ஜாக்கிரதையா இருக்கலாம்" என்று சொல்லிவிட்டு பாடத்தை ஆரம்பித்தது அண்டங் காக்கா. குஞ்சு காகங்கள் எல்லாம் சிரத்தையுடன் பாடத்தை கவனிக்க ஆயத்தமாயின.

"நகரத்தில் சுற்றுச்சூழல் ரொம்பவும் மோசமாகிப் போச்சு. ரோட்டை விரிவுபடுத்துற, பாலங்கட்டுறன்னு சொல்லி மரங்களை எல்லாம் வெட்டிக்கிட்டே வர்றாங்க. இதனால நம்மோட தோழர்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்துட்டே வர்றாங்க. அதுமட்டுமில்லாம தண்ணீரும் ரொம்பவே கெட்டுப்போச்சு..." என்று அண்டங்காக்கா பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே ஒரு குஞ்சு காக்கா இடைமறித்து ஒரு கேள்வி கேட்டது.

"நம்ம காக்கா இனத்தை பத்தி மனுஷங்க கொஞ்சம் கூட நெனச்சே பார்க்கமாட்டாங்களா?! மரங்களை வெட்டுனா நாம பாதிக்கப்படுவோம்னு அவங்களுக்கு தெரியாதா?!" என்றது.

"வெரிகுட்! ரொம்ப நல்ல கேள்வி கேட்டாய். மனுஷங்க ரொம்ப மாறிட்டாங்க. அவங்களுக்கு நம்மளை போன்ற பறவைகளையும், பிற உயிரினங்களையும் பத்தியெல்லாம் யோசிக்க நேரமே கிடையாது. ஏன்னா, அவங்க வாழ்க்கை அசுரவேகத்துலதான் சுத்திக்கிட்டு இருக்கு. ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம். ஒரேயடியா மனுஷங்க நம்மளை மறந்துடலை. அது பத்தி ஒரு கதையே இருக்கு..." என்று கதை சொல்ல ஆரம்பித்தது அண்டங்காக்கா.

"கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி கருத்தழகு என்ற காக்கா வாழ்ந்துச்சு. தீனிக்காக ஒருநாள் ரொம்ப தூரம் போயிடுச்சு. அப்போ, அதுக்கு பயங்கரமான தாகம்! 'எங்காவது தண்ணி இருக்காதா!'என்று ஒரு கிராமத்தை சுத்தி சுத்தி பறந்துச்சு. ஒரு வீட்டுக்கு வெளியில பானையில கொஞ்சம் தண்ணி இருக்கறதை பார்த்து சந்தோஷப்பட்டுச்சு. ஆனா, பானையில இருந்த தண்ணி கொஞ்சமா இருந்துச்சு. காக்கையாலே குடிக்க முடியலை. அப்போ ஒரு 'பளீர்'ஐடியா பண்ணுச்சு.

கீழே கிடந்த கூழாங்கற்களையெல்லாம் ஒவ்வொண்னா பொறுக்கி பானைக்குள்ளே மெதுவா போட்டுச்சு. பானையில இருந்த தண்ணியும் மெல்ல மெல்ல பானையோட விளிம்புக்கு வந்துச்சு. அந்த தண்ணியும் சுத்தமானதா வடிகட்டினதா இருந்துச்சு.

காக்காவும் சந்தோஷமா தண்ணி குடிச்சுச்சு. காக்காவோட இந்த செயலை சில மக்கள் பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ, கருத்தழகு காக்காவின் அறிவுப்பூர்வமான செயலை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனாங்க.

'கருத்தழகு காக்கா மாதிரி எந்தவொரு விஷயத்திலும் விடாமுயற்சி இருக்கணும், தண்ணீரை சுத்தப்படுத்தி குடிக்கணும்'அப்படீங்கிற விஷயத்தை மனுஷங்க நம்மோட இனத்தை பார்த்து கத்துக்கிட்டாங்க. இதுக்கு நன்றி சொல்லும் விதமா, இறந்து போன அவங்களோட முன்னோர்களை நம் வடிவமா பார்க்கறாங்க. சில மனுஷங்க நம் இனத்துக்கு உணவு படைச்சுட்டுதான் அவங்களே சாப்பிடுவாங்க. காய்ச்சி வடிகட்டிய நீரை நம் கருத்தழகு காக்கை போல குடித்து உடலை சுத்தமாக பேணாமல் போனதால் வருகிற ஒருவித வலிப்புக்கு 'காக்கா வலிப்பு' என்றும் அழைக் கிறார்கள்" என்று என்று கதை சொல்லி முடித்தது அண்டங்காக்கா.

மேலும் குஞ்சு காகங்கள் உள்பட அனைத்து காகங்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை சொன்னது அண்டங் காக்கா.

"இப்போதெல்லாம் மனுஷங்க 'பாக்கெட் வாட்டர்’-தான் அதிகமாக பயன்படுத்துறாங்க. பாலித்தீன் பையில் இருக்கும் தண்ணீர் மிகவும் ஆபத்து. அதை நீங்கள் யாரும் குடிக்கக்கூடாது. அது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்" என்று ஒரு 'ஹெல்த் டிப்ஸ்'சொல்லிவிட்டு பறந்தது அண்டங்காக்கா.

இன்றைய ஸ்கூலில் பல விஷயங்களை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் குஞ்சு காகங்களும், மற்ற காகங்களும் குதூகலத்துடன் கூடுகளுக்கு பறந்தன.

-இரா.நடராசன்

0 comments: