பேசும் புத்தகங்கள்!

நூலகம் அமைதியின் ஆலயம். ஆனால் இங்கு புத்தகங்களே மனிதர்களைப்போல் பேசினால்... ஆம், இந்த 'பேசும் நூலகம்' இந்தியாவிலேயே மும்பை மற்றும் மதுரையில்தான் உள்ளது. பார்வையற்றவர்களும் புத்தகம் படிக்க வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நூலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பார்வையற்ற 2,600 பேரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள மதுரை நூலகத்தில், 1,600 புத்தகங்கள் 'குரல்வளக் கலைஞர்கள்' மூலம் படிக்கப்பட்டு அவை ஒலிப்பதிவு செய்யப் பட்டுள்ளன. ஆறாம் வகுப்பிலிருந்து பட்டப்படிப்பு வரை நூல்கள் ஆடியோ வடிவில் கேசட்டுகளாக உள்ளன. படிப்பை மையமாகக் கொண்ட புத்தகங்கள் மட்டுமின்றி இதர புத்தகங்களும் உள்ளன. குறிப்புகள் எடுப்பதற்கும் உரிய வசதிகள் உள்ளன. நூலகத்தில் தனித்தனி இருக்கைகள் அமைக்கப்பட்டு... ஒவ்வொரு இருக்கையிலும் ஒவ்வொரு ஆடியோ சிஸ்டமும் ஹெட்போனும் உள்ளது. பார்வை அற்றவர்கள் தங்களுக்கு வேண்டிய புத்தகம் பதிவாகியிருக்கும் ஆடியோ கேசட்டுகளை எடுத்து சிஸ்டத்தில் போட்டுக் கொள்ளலாம். இப்படி புத்தகங்களை கேட்டுப் படித்தே எம்.எட் வரை 30 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். இவர்கள் அனைவருமே இப்போது ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள்.

"புத்தகங்களை ஒலிப்பதிவு செய்வதற்காக 30 லட்சம் ரூபாய் செலவில் ஓர் ஒலிப்பதிவுக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. கண்தானம், இரத்ததானம், அன்னதானம் போல் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் புத்தகங்களை வாசிக்க அது அப்போதே ஒலி நாடாக்களில் பதிவு செய்யப்படுகிறது. இதற்கென அவர்கள் பணம் பெற்றுக் கொள்வதில்லை, இது குரல்தானம்" என்கிறார் இந்நிறுவனத்தின் இயக்குநர் நிக்கோலஸ் ஃபிரான்ஸிஸ். இந்நூலகத்துக்கு அஞ்சல்துறை இலவச பதிவுத்தபால் சேவையை அளித்திருக்கிறது.

"வைரமுத்து கவிதைகள், அப்துல்கலாமின் அக்னிச் சிறகுகள் போன்ற புத்தகங்களை படிக்கணும்ங்கிறது என்னோட நீண்ட நாள் ஆசை. ஆனால் இவற்றையெல்லாம் படிக்க முடியாதோன்னு கவலைப்பட்டேன். பேசும் நூலகத்தால் இந்த ஆசை நிறைவேறியது" என்று மகிழ்கிறார் பார்வைத் திறனற்ற கல்லூரி மாணவி காளிதேவி.

ஓசையை உலகமாகக் கொண்டு வாழும் பார்வையற்றவர்களுக்கு இந்நூலகம் ஒரு வரப் பிரசாதம்.


0 comments: