ராட்சஸனை அறிவால் வீழ்த்திய சிறுவன்பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் அரச குமாரனாகப் பிறந்தார். அவரது பெயர்சூட்டு விழாவின் போது பல நாடுகளிலிருந்தும் சோதிடர்களும் அறிஞர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் மன்னனிடம் "அரசே! இந்தச் சிறுவனின் ஜாதகம் மிகமிகச் சிறந்தது. இவன் ஐந்து வித ஆயுதங்களைக் கொண்டு உலகம் முழுவதையுமே வென்று பராக்கிரமசாலியாகத் திகழ்வான்" எனக் கூறி அக்குழந்தைக்கு பஞ்சாயுதன் என்ற பெயரையும் சூட்டினார்கள்.
சில வருடங்களாயின. அரசன் பஞ்சாயுதனைப் படிக்க வைக்க தட்சசீலத்திற்கு அனுப்பினான். அந்நாட்களில் அது
சிறந்த கல்விக் கூடமாக இருந்தது. பல பண்டித மேதைகள் அங்கு இருந்தனர். பஞ்சாயுதனும் அங்குபோய் எல்லா சாஸ்திரங்களையும் கற்றான்.

குருகுலத் தலைமை ஆசிரியர் பஞ்சாயுதனின் கல்வி முடிந்ததும் சிறப்பு மிக்க ஐந்து ஆயுதங்களை அவனுக்கு அளித்து ஆசி கூறி அனுப்பினார். பஞ்சாயுதனும் காசிக்குக் கிளம்பினான்.வழியில் அடர்ந்த காடு ஒன்றை அவன் கடந்து செல்ல வேண்டி இருந்தது. அக்காட்டில் அவனைக் கண்ட சில முனிவர்கள் "நீயோ சிறுவனாக இருக்கிறாய். இந்தக் காட்டில் ரோமாஞ்சன் என்ற பயங்கர ராட்சஸன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ பட்டால் உன்னைக் கொன்று தின்று விடுவான். எனவே நீ வேறு வழியில் செல்" என்று கூறினார்கள். பஞ்சாயுதனோ அதனால் சற்றும் பயப்படாமல் அதே வழியில் சென்றான். வழியில் அவன் பனைமர உயரமுள்ள ரோமாஞ்சன் என்ற ராட்சஸனைக் கண்டான். அவன் பார்க்க பயங்கரமாக பெரிய தலையுடனும் அனல் கக்கும் கண்களுடனும் இருந்தான்.

உடல் முழுவதும் கரடி போல அடர்ந்த ரோமம் வளர்ந்திருந்தது. ராட்சஸன் பஞ்சாயுதனை வழி மறித்து "யாரடா நீ! நில். எங்கே போகிறாய்? உன்னை அப்படியே விழுங்கப் போகிறேன்" என்று உரக்கக் கூவினான். பஞ்சாயுதன் சற்றும் பயப்படாமல் "அப்பா ராட்சஸனே! நீ இருப்பது தெரிந்துதான் இந்த வழியே வந்தேன். என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. பேசாமல் போய்விடு" என்று கூறி ஒரு அம்பை ராட்சஸன் மீது எய்தான்.
ஆனால் அந்த அம்பு ராட்சஸனை காயப்படுத்தவில்லை. அதனால் பஞ்சாயுதன் அம்புகளை அடுத்தடுத்து எய்து கொண்டே இருந்தான். அப்போதும் ராட்சஸனை அவை ஒன்றும் செய்யவில்லை. முடிவில் விஷம் தோய்ந்த அம்பை அவன் ராட்சஸன் மீது விடுத்தான். அதுவும் பயனற்றுப் போயிற்று.

 ராட்சஸன் பயங்கரமாகக் கத்தியவாறே பஞ்சாயுதன் மீது பாய்ந்தான். பஞ்சாயுதன் தன் வாளால் அவனைத் தாக்கினான். அப்போதும் அவன் அடங்கவில்லை. ராட்சஸன் பலமாகச் சிரித்து "பயலே! நீ விடாது என்னைத் தாக்க முயல்வதைப் பார்த்தால் நீ எல்லாரையும் போல அல்ல என்று நன்கு தெரிகிறது. மிகவும் பலமுள்ள என்னையே துணிந்து எதிர்த்து நிற்கிறாய். என்னைப் பார்த்தால் எல்லோரும் பயப்படுவார்களே. உனக்கு அப்படி பயமே ஏற்படவில்லையா?" என்று கேட்டான். பஞ்சாயுதனும் "பயமா? பிறந்தால் என்றாவது இறக்கத் தானே வேண்டும்? என் உடலில் அபூர்வ சக்தி வாய்ந்த வாள் உள்ளது.

அதுதான் அறிவு என்பது. என்னை நீ விழுங்க முயன்றால் அது உன்னை அழித்து விடும்" என்றான். ராட்சஸன் சற்று யோசித்து விட்டு "நீ சொல்வது உண்மையா? அப்படியானால் உன் போன்ற சக்தி வாய்ந்தவனை நான் விழுங்கினால் ஜீரணிப்பது மிகவும் கஷ்டமே. எனவே உன்னை விட்டு விடுகிறேன். நீ உன் வழியே போ" என்றான்.

பஞ்சாயுதனாக அவதரித்த போதிசத்வர் ராட்சஸனை ஆசீர்வதித்து "என்னை விட்டு விட்டாயா? ரொம்ப சரி. ஆனால் உன் விஷயம் என்ன? இப்படியே கெட்ட வழியில்தான் போய்க் கொண்டே இருக்கப் போகிறாயா? அஞ்ஞானம் என்ற இருளில் இருக்கிறாயே. நீ திருந்திவிடு. பிறரைத் துன்புறுத்தாதே நல்லறிவு பெற்று நற்செயல்களையே புரி" என்றார்.
ராட்சஸன் அவரது ஒளி மிகுந்த உருவத்தாலும், பேச்சாலும் அடங்கி ஒடுங்கிக் கை கூப்பி "ஐயா மகானுபாவரே! நான் நல்லறிவு பெற என்ன செய்ய வேண்டும்?" என்று பணிவுடன் கேட்டான்.
போதிசத்வரும் "நீ இக்காட்டு வழியே வருபவர்களைக் கொன்று தின்று பாரமாக்கிக் கொள்கிறாய். அப்படி பாவம் அதிகரிக்க அதிகரிக்க நீ இந்த மாதிரி ராட்சஸனாகத்தான் பிறந்து உழல்வாய். இதனால் உனக்கு என்றுமே நற்கதி கிட்டாது. நீ உயர்ந்த மானிடப் பிறவி அடைய வேண்டுமானால் இப்படிப் பாவச் செயல்களைப் புரியாதே" என்று அறிவுரைகளைக் கூறினார்.
அவர் கூறிய ஐந்து நெறிகளைக் கேட்ட ரோமாஞ்சனின் மனம் மாறியது. அன்று முதல் கொடிய பாவச் செயல்கள் புரிவதை விட்டு விட்டான். அது மட்டுமல்ல அவ்வழியே வரும் வழிப்போக்கர்களை உபசரித்து உணவளித்து நற்பெயர் பெற்றான். இப்படியாக பயங்கரக் கொள்ளைக்காரனாக இருந்த ரோமாஞ்சனை போதிசத்வர் தம் அறிவுரையால் நல்லவனாகத் திருத்தி விட்டார். ரோமாஞ்சனும் தன் கெட்ட செயல்களை விட்டு நல்லவனான்.

 

0 comments: