gfg

fgfg

கனவுகளின் பொருள்



 
கோசல நாட்டு மன்னனான பிம்பிசாரன் ஒரு நாளிரவு பல விசித்திர பயங்கரக் கனவுகளைக் கண்டான். மறுநாள் பல பிராம்மணர்களை அழைத்து "நீங்கள் சகல சாஸ்திரங்களைக் கற்றவர்கள். நான் கண்ட கனவுகளின் பொருள் என்ன? அதனால் ஏற்படும் பலன் என்ன?" என்று கேட்டான்.
 
பிராம்மணர்களும் மன்னன் கண்ட கனவுகளைக் கேட்டனர். இதுதான் பணம் பறிக்கத் தக்க தருணம் என அவர்கள் எண்ணினர், "அரசே! இக்கனவுகளால் உங்களுக்கும் உங்கள் வம்சத்திற்கும் உங்கள் நாட்டிற்கும் விரைவில் கஷ்டம் வரப் போகிறது. ஆனால் அதைத் தடுக்கப் பரிகாரம் செய்தால் போதும். நாட்டில் நான்கு பாதைகள் கூடும் இடங்களில் எல்லாம் யாகங்கள் நடத்தி பிராம்மணர்களுக்கு அவர்கள் மனம் குளிர தானமும் தட்சிணையும் கொடுத்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்" என்றார்கள்.
 
அதைக் கேட்ட மன்னன் "சரி. மந்திரியிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்" என்றான். தன் பொக்கிஷ அதிகாரியிடமும் தானதர்மத்திற்காகப் பணம் தனியாக எடுத்து வைக்கவும் கட்டளையிட்டான். இது ராணிக்குத் தெரிந்தது. பிராம்மணர்களின் பேராசையைப் புரிந்து கொண்ட அவள் மன்னனிடம் "நீங்கள் இவர்கள் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
இவர்களுக்கு அரைகுறை அறிவே உள்ளது. சுயநலம் காரணமாக இப்படி தான தர்மம் செய்யச் சொல்லி அவற்றை அடைய விரும்புகிறார்கள். ஜைதவனத்தில் புத்தர்பிரான் இருக்கிறார். அவரிடம் உங்கள் கனவுகளைக் கூறி அவற்றின் பலன்கள் பற்றிக் கேளுங்கள். அவர் உங்களுக்கு 
விவரமாக எல்லாவற்றையும் கூறுவார்" என்றாள்.
பிம்பிசாரனும் "நானே நேரடியாக ஜைதவனத்திற்குப் போய் அவரை தரிசித்து நம் அரண்மனையில் பிகைஷ ஏற்க வருமாறு வேண்டுகிறேன்" எனக்கூறி ஜைதவனத்திற்குச் சென்றான். புத்தரும், மன்னனின் அழைப்பை ஏற்று அவனது அரண்மனைக்கு வந்தார்.
 
மன்னனும் அவருக்குத் தக்கபடி உபசரித்து "ஐயனே, நான் சில கனவுகளைக் கண்டேன். அவற்றின் பலன்கள் என்ன என்று சொல்ல வேண்டும்" என வேண்டினான். புத்தரும் "நீ கண்ட கனவுகளைச் சொல். அவற்றின் பலன்களைக் கூறுகிறேன்" என்றார்.
 
பிம்பிசாரனும் "முதலாவது கனவில் நான்கு காளைகள் அரண்மனையை நோக்கி ஓடி வந்தன. அவை சண்டை போடுவதைக் கண்டு களிக்கலாம் என மக்கள் நினைத்துக் கூடினர். ஆனால் அவைகள் சண்டை போடாமல் நான்கு திசைகளில் பிரிந்து சென்றன. இதன் பொருள் என்னவோ? விளக்கமாக எனக்கு கூறுங்கள்" எனக் கேட்டான்.
 
புத்தரும் "மன்னா! இது உனக்கும் தற்கால நடப்பிற்கும் சம்மந்தப்பட்டதல்ல. பிற்காலத்தில் அரசர்கள் பாவங்களைப் புரிவார்கள். அப்போது கருமேகங்கள் வந்து மழை பெய்யப் போவது போல பிரமையை ஏற்படுத்திவிட்டு பெய்யாமல் போய்விடும். அவற்றின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை ஏமாற்றமாக முடியும்" என்றார்.
 
மன்னனும் "அடுத்த கனவில் மரம் செடிகள் அதிகம் உயராமல் குட்டையாகவே இருந்து மலர்ந்து காய்களைக் கொடுப்பதாகக் கண்டேன். இதன் ரகசியம் என்னவோ?" என்று கேட்டான்.
 
புத்தரும் "நான் முன்பே கூறியபடி வருங்காலத்தில் பாவங்கள் அதிகரிக்க பெண்கள் சிறுமிகளாக இருக்கையிலேயே மணம் புரிந்து கொண்டு பெரியவர்களாகுமுன்பே குழந்தைகளைப் பெற்று விடுவார்கள். இதுவே அக்கனவின் பொருள்" என்றார். "பசுமாடுகள் கன்றுகளிடமிருந்து பால் குடிப்பதாக இன்னொரு கனவையும் நான் கண்டேன்.
இதன் பொருள் என்னவோ?" என மன்னன் கூறவே புத்தரும் "கிழவர்கள் இளைஞர்களை நம்பி இருக்க வேண்டி வரும் என்பதே பொருள்" என்றார். "அடுத்து குடியானவர்கள் ஏர்களில் உள்ள முரட்டு எருதுகளை அவிழ்த்துவிட்டு அவற்றிற்குப் பதிலாகக் கன்றுக் குட்டிகளைக் கட்டுவதாகக் கனவு கண்டேன்" என மன்னன் கூறினான்.
 
புத்தரும் "நான் கூறிய பாவச் செயல் புரியும் மன்னர்கள் நல்ல மந்திரிகளைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டு அனுபவஞானமே இல்லாத இளைஞர்களை அப்பதவிகளில் அமர்த்துவார்கள். இதுதான் அக்கனவின் பொருள்" என்றார்.
 
"ஒருவன் கம்பளம் நேய்து கொண்டே இருக்க நேய்யாது கீழே கிடந்த பாகத்தை பெண் நரிகள் கடித்துத் தின்பதாக ஒரு கனவு கண்டேன்" என மன்னன் கூறவே புத்தரும் "வருங்காலத்தில் பாவம் அதிகரிக்கும். கணவன் சிரமப்பட்டு சம்பாதித்ததை மனைவி வீண் செலவு செய்வாள் என்பது பொருளாகும்" என்றார்.
 
"இரட்டைத் தலைக் குதிரை ஒன்று கொள்ளை தன் இருவாய்களாலும் சாப்பிடுவது போல ஒரு கனவு கண்டேன்" என மன்னன் சொல்லவே புத்தரும் "அரசாங்க வருமானத்தில் வருங்காலத்தில் அதிகாரிகள் சம்பளமும் பெற்றுக் கொண்டு லஞ்சமும் வாங்குவார்கள் என்பது இதன் பொருள்" என்றார்.
 
"அரண்மனை முன் ஒரு பெரிய குழியும் பல சிறிய குழிகள் இருப்பது போலவும் பெரிய குழியில் மட்டும் வழியவழியத் தண்ணீரை மக்கள் விடுவதையும் சிறிய குழிகளை கவனிக்காமல் இருப்பது போலவும் கனவு கண்டேன்" என்றான் மன்னன். புத்தரும் "மக்கள் சிரமப்பட்டு சம்பாதிப்பதை வருங்காலத்தில் அரசாங்க பொக்கிஷத்தில் நிரப்புவார்கள்.
 
ஆனால் மக்கள் வசதி எதுவும் பெறாமல் தம் வீடுகளில் பணம் இல்லாமல் தவிப்பார்கள்" என்றார். "ஒரு பாத்திரத்தில் சாதம் எல்லாப் பக்கத்திலும் ஒரே மாதிரி வேகாமல் ஒரு பக்கம் நன்கு வந்தும் வேறு பல பக்கங்களிலும் வேகாமல் இருப்பது போலவும் கண்டேன்" என பிம்பிசாரன் கூறினார். அதற்கு புத்தபிரான், "இது வருங்கால விவசாயம் பற்றியது.
நாட்டில் ஓரிடத்தில் நல்ல பயிர் விளைச்சலும் மற்ற பகுதிகளில் அறைகுறையான விளைச்சலுமே இருக்கும் எனக் காட்டுகிறது" என்று புத்தர் கூறினார். "மற்றொரு கனவு. அதில் நல்ல விலையுயர்ந்த சந்தனத்தைச் சிலர் தெருவில் விற்றுக் கொண்டு போவது போலக் கண்டேன்" என மன்னன் கூறவே புத்தரும்" வருங்காலத்தில் சில கயவர்கள் புனிதமான உபதேசங்களைத் தம் இஷ்டம் போலக்கூறி மிகவும் கேவலமான போக வாழ்க்கையை அடைவார்கள் என்பதே இதன் பொருள்" என்றார்.
 
"இன்னும் சில கனவுகள் பாறைகள் நீரில் மிதப்பது போலவும் அன்னப் பறவைகளின் கூட்டத்தில் காகம் சேர்ந்து நடப்பது போலவும் ஆடுகள் புலிகளை அடித்துக் கொன்று தின்பதும் அவற்றைக் கண்டு ஓநாய்கள் பயந்து நடுங்குவதும் நடப்பது போலக் கண்டேன். இவை என்ன கெடுதல்களைக் குறிக்கின்றனவோ?" என்று பிம்பிசாரன் பணிவுடன் கேட்டான்.
 
புத்தரும் "இவையெல்லாம் வருங்காலத்தில் விபŽத சம்பவங்கள் நிகழும் என்பதைக் காட்டுகின்றன. இவை உன் காலத்தில் ஏற்படாது. அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். வருங்காலத்தில் தர்மம் சீர்குலைந்து அதர்மம் மேலோங்க அப்போது நல்லவர்களெல்லாம் துன்பப்பட, கெட்டவர்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.

 
நல்லவை நசிந்து தீயவை மேலோங்கி வரும். இதனைத் தான் நீ கூறியவை குறிக்கின்றன. இவை யாவும் நாட்டில் பாவம் அதிகரிக்கும் போது ஏற்படுபவை. நீ புண்ணியகாரியங்களைச் செய்து தர்மவழியில் நடந்து வருகிறாய். தொடர்ந்து இப்படியே இரு. உனக்கு எவ்வித பயமும் இல்லை உன் நாடும் சுபீட்சமாக இருக்கும்" என்றார்.
 
பிம்பிசாரனின் சந்தேகங்கள் தீர்ந்தன. அவன் மனத்தில் அநாவசியமாக பிராம்மணர்கள் தோற்றுவித்த பயம் ஒழிந்தது. எனவே அவன் யாகங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்வதை நிறுத்தி விட்டான். புத்தரது உபதேசங்களை ஏற்று அவரைத் தக்கபடி உபசரித்து அவரை ஜைதவனத்திற்குக் கொண்டு போய் விட்டு வந்தான்.

யானைப்பாக மன்னன்

 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் காசியருகே ஒரு சன்னியாசியாக பிறந்திருந்தார். அவர் தினமும் பிச்சை எடுத்து வருவார். ஒரு நாள் அவர் ஒரு யானைப்பாகனின் வீட்டிற்குப் போனார். அந்த யானைப் பாகன் யானைகளைப் பிடிப்பதிலும் அக்கலையை பிறருக்கு போதிப்பதிலும் மிகவும் திறமையானவனாக இருந்தான்.
 
சன்னியாசியைக் கண்ட யானைப் பாகன் அவரை மரியாதையுடன் வரவேற்று வீட்டிற்குள் அழைத்து போய் உணவு அளித்தான். பிறகு அவன் பணிவுடன் "தாங்கள் சிறிது நாள்களாவது என் வீட்டில் தங்கி இருந்து நான் அளிக்கும் உணவை ஏற்க வேண்டும்" என்று கூறினான். போதிசத்வரும் யானைப்பாகனின் வீட்டில் ஒரு வார காலம் இருந்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது அவர் யானைப்பாகனுக்கு நல்லாசிகள் கூறி விட்டு சென்றார். உயர்ந்த ஸ்தானத்திற்குக் கொண்டு போயின.
 
ஒரு நாளிரவு ஒரு விறகு வெட்டி ஒரு கோயில் மண்டபத்தில் படுத்துக் கொண்டிருந்தான். அதனருகே இருந்த மரத்தின் மீது சில கோழிகள் இருந்தன. மரத்தின் கீழ் ஏதோ சத்தம் ஏற்படுவது கேட்டு மரத்தின் மீதிருந்த ஒரு கோழிக் குஞ்சு பயந்து நடுங்கிக் கீழே வேறொரு கிளையிலிருந்த கோழிக் குஞ்சின் மீது விழுந்து அதன் தூக்கத்தைக் கலைத்தது.
 
தூக்கம் கலைந்த கோழிக் குஞ்சு "அடேயப்பா! உனக்கு அவ்வளவு கர்வமா? என் பெருமை தெரியாதா? என்னைச் சாப்பிடுபவனுக்குப் புதையல் கிடைக்குமே" என்றது. அது கேட்டு அதன் மீது விழுந்த கோழிக் குஞ்சு "என்னைச் சாப்பிடுபவன் ராஜாவாகி விடுவானே" என்றது.
இரு கோழிக் குஞ்சுகள் பேசியதை மண்டபத்தில் படுத்திருந்த விறகு வெட்டி கேட்டு விட்டான். அவன் மூளை வேகமாகச் செயல் படத் தொடங்கியது. அவன் `ஆகா! எனக்குத்தான் என்ன அதிர்ஷ்டம்! இங்கே ஒரு கோழிக் குஞ்சு உள்ளது. அதனைப் பிடித்துக் கொன்று நான் சாப்பிட்டு விட்டால் இந்நாட்டின் மன்னனாகி விடுவேன். இனிமேல் கஷ்டப்பட்டு விறகு வெட்டி விற்றுப் பிழைக்க வேண்டாம்' என எண்ணினான். அவன் சற்று நேரம் கழித்து மரத்தின் மீதேறினான். எந்தக் குஞ்சு தன்னைச் சாப்பிட்டால் ஒருவன் ராஜா ஆவான் என்று கூறியதோ அதனை அவன் பிடித்துக் கொண்டு கீழே இறங்கித் தன் வீட்டிற்குப் போனான்.
 
தன் மனைவியிடம் விஷயத்தைக் கூறி அவன் அக்குஞ்சை நன்கு வாட்டி சமைத்து வைக்கச் சொன்னான். அவளும் தான் ராணியாக போவதை நினைத்து உற்சாகத்துடன் அந்தக் கோழிக் குஞ்சைக் கொன்று நன்கு வாட்டி சமைத்து ஒரு சிறு கலயத்தில் எடுத்து வைத்தாள். அப்போது விறகு வெட்டி "நாம் இருவரும் இதனை எடுத்துக் கொண்டு ஆற்றிற்குப் போவோம். நன்கு குளித்து கடவுளை வணங்கி விட்டு நிதானமாக இதைச் சாப்பிடுவோம்" என்றான். அவளும் அவன் கூறியதற்கு சம்மதித்து கலயத்தை எடுத்துக் கொண்டு ஆற்றிற்குக் கிளம்பினாள்.
 
ஆற்றின் கரையில் அக்கலயத்தை அவர்கள் வைத்து விட்டு குளத்தில் குளித்தார்கள். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் வரவே விறகு வெட்டியும் அவன் மனைவியும் உயிர் தப்ப நீந்தி எங்கோ போய் கரை சேர்ந்தார்கள். அவர்கள் வைத்திருந்த கலயம் ஆற்று வெள்ளத்தில் மிதந்தவாறே போனது. விறகு வெட்டியோ "ஐயோ! இந்த நாட்டின் மன்னனாகும் அதிருஷ்டம் எனக்கு இல்லையே" எனத் தன் மனைவியிடம் கூறிக் கண்ணீர் வடித்தான்!
 
அதே சமயம் ஆற்றில் சிறிது தூரத்தில் போதிசத்வருக்கு உணவளித்த யானைப்பாகன் ஒரு யானையை ஆற்றில் குளிப்பாட்டிக் கொண்டு இருந்தான். அவன் கண்ணில் ஆற்றில் மிதந்து வரும் கலயம் தென்பட்டது. அவன் அதனைப் பிடித்து எடுத்தான்.
 
அதில் நன்கு பக்குவப்படுத்தப் பட்ட கோழிக் குஞ்சின் மாமிசம் இருப்பது கண்டு அதனை எடுத்து உடனேயே வாயில் போட்டு மென்று தின்று விட்டான்.
 
இது நடந்த மூன்றாவது நாள் காசி மீது அண்டை நாட்டு மன்னன் படை எடுத்து வந்தான். அது கண்டு காசி மன்னன் பயந்து போனான். அவன் இயல்பாகவே ஒரு தொடை நடுங்கி. போர் என்றால் பயந்து விடுவான். ஆகையால் அண்டை நாட்டு மன்னன் திடீரெனப் படை எடுத்து வந்ததும் தான் எப்படியாவது உயிர் தப்ப வேண்டுமென நினைத்து யானைப்பாகன் போல வேடம் பூண்டு யானைப்பாகனை அரசனின் ஆடைகளை உடுத்திக் கொள்ளச் சொன்னான். பிறகு அவனை யானை மீது உட்கார வைத்துத் தான் யானைப்பாகனின் இடத்தில் அமர்ந்தான். எதிரிகள் விட்ட அம்பு குறி தவறி யானைப்பாகனாக வேடம் பூண்ட அரசனின் மீது பட அவன் இறந்து விழுந்தான்.
 
யானை மீது அமர்ந்திருந்த யானைப்பாகனோ போர்களத்தில் இருந்து ஓடாமல் வீரர்களை உற்சாகப் படுத்தி போர் புரியச் சொன்னான். போர்களம் என்றால் நடுங்கும் மன்னனா இப்படி போர் புரிகிறான் என அனைவரும் நினைத்தனர். மன்னனாக இருந்த யானைப்பாகனும் வீராவேசத்துடன் போர் புரிந்தான். எதிரிப் படை பின் வாங்கி ஓடி விட்டது. அண்டை நாட்டு மன்னன் இறந்து போனான்.
 
போர் முடிந்ததும் யானை மீது இருந்தது உண்மையில் மன்னன் அல்ல என்றும் மன்னன் வேடத்தில் யானைப்பாகன்தான் இருந்தான் என்றும் எல்லாருக்கும் தெரிந்தது. இறந்த காசி மன்னனுக்கு குழந்தைகளே இல்லை. அதனால் யாவரும் "முன்பு இருந்த அரசனே தன் ஆடைகளை இந்த யானைப் பாகனுக்குக் கொடுத்ததால் இனி நம் மன்னன் இவனே" என்றனர்.
 
மந்திரியும் புரோகிதரும் சேனாதிபதியும் மக்கள் அபிப்பிராயப் படியே யானைப்பாகனை மன்னன் ஆக்கினார்கள். அவனும் நன்கு ஆட்சி புரியலானான்.
 

 

ராட்சஸனை அறிவால் வீழ்த்திய சிறுவன்



பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் அரச குமாரனாகப் பிறந்தார். அவரது பெயர்சூட்டு விழாவின் போது பல நாடுகளிலிருந்தும் சோதிடர்களும் அறிஞர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் மன்னனிடம் "அரசே! இந்தச் சிறுவனின் ஜாதகம் மிகமிகச் சிறந்தது. இவன் ஐந்து வித ஆயுதங்களைக் கொண்டு உலகம் முழுவதையுமே வென்று பராக்கிரமசாலியாகத் திகழ்வான்" எனக் கூறி அக்குழந்தைக்கு பஞ்சாயுதன் என்ற பெயரையும் சூட்டினார்கள்.
சில வருடங்களாயின. அரசன் பஞ்சாயுதனைப் படிக்க வைக்க தட்சசீலத்திற்கு அனுப்பினான். அந்நாட்களில் அது
சிறந்த கல்விக் கூடமாக இருந்தது. பல பண்டித மேதைகள் அங்கு இருந்தனர். பஞ்சாயுதனும் அங்குபோய் எல்லா சாஸ்திரங்களையும் கற்றான்.

குருகுலத் தலைமை ஆசிரியர் பஞ்சாயுதனின் கல்வி முடிந்ததும் சிறப்பு மிக்க ஐந்து ஆயுதங்களை அவனுக்கு அளித்து ஆசி கூறி அனுப்பினார். பஞ்சாயுதனும் காசிக்குக் கிளம்பினான்.வழியில் அடர்ந்த காடு ஒன்றை அவன் கடந்து செல்ல வேண்டி இருந்தது. அக்காட்டில் அவனைக் கண்ட சில முனிவர்கள் "நீயோ சிறுவனாக இருக்கிறாய். இந்தக் காட்டில் ரோமாஞ்சன் என்ற பயங்கர ராட்சஸன் இருக்கிறான். அவன் கண்ணில் நீ பட்டால் உன்னைக் கொன்று தின்று விடுவான். எனவே நீ வேறு வழியில் செல்" என்று கூறினார்கள். பஞ்சாயுதனோ அதனால் சற்றும் பயப்படாமல் அதே வழியில் சென்றான். வழியில் அவன் பனைமர உயரமுள்ள ரோமாஞ்சன் என்ற ராட்சஸனைக் கண்டான். அவன் பார்க்க பயங்கரமாக பெரிய தலையுடனும் அனல் கக்கும் கண்களுடனும் இருந்தான்.

உடல் முழுவதும் கரடி போல அடர்ந்த ரோமம் வளர்ந்திருந்தது. ராட்சஸன் பஞ்சாயுதனை வழி மறித்து "யாரடா நீ! நில். எங்கே போகிறாய்? உன்னை அப்படியே விழுங்கப் போகிறேன்" என்று உரக்கக் கூவினான். பஞ்சாயுதன் சற்றும் பயப்படாமல் "அப்பா ராட்சஸனே! நீ இருப்பது தெரிந்துதான் இந்த வழியே வந்தேன். என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. பேசாமல் போய்விடு" என்று கூறி ஒரு அம்பை ராட்சஸன் மீது எய்தான்.
ஆனால் அந்த அம்பு ராட்சஸனை காயப்படுத்தவில்லை. அதனால் பஞ்சாயுதன் அம்புகளை அடுத்தடுத்து எய்து கொண்டே இருந்தான். அப்போதும் ராட்சஸனை அவை ஒன்றும் செய்யவில்லை. முடிவில் விஷம் தோய்ந்த அம்பை அவன் ராட்சஸன் மீது விடுத்தான். அதுவும் பயனற்றுப் போயிற்று.

 ராட்சஸன் பயங்கரமாகக் கத்தியவாறே பஞ்சாயுதன் மீது பாய்ந்தான். பஞ்சாயுதன் தன் வாளால் அவனைத் தாக்கினான். அப்போதும் அவன் அடங்கவில்லை. ராட்சஸன் பலமாகச் சிரித்து "பயலே! நீ விடாது என்னைத் தாக்க முயல்வதைப் பார்த்தால் நீ எல்லாரையும் போல அல்ல என்று நன்கு தெரிகிறது. மிகவும் பலமுள்ள என்னையே துணிந்து எதிர்த்து நிற்கிறாய். என்னைப் பார்த்தால் எல்லோரும் பயப்படுவார்களே. உனக்கு அப்படி பயமே ஏற்படவில்லையா?" என்று கேட்டான். பஞ்சாயுதனும் "பயமா? பிறந்தால் என்றாவது இறக்கத் தானே வேண்டும்? என் உடலில் அபூர்வ சக்தி வாய்ந்த வாள் உள்ளது.

அதுதான் அறிவு என்பது. என்னை நீ விழுங்க முயன்றால் அது உன்னை அழித்து விடும்" என்றான். ராட்சஸன் சற்று யோசித்து விட்டு "நீ சொல்வது உண்மையா? அப்படியானால் உன் போன்ற சக்தி வாய்ந்தவனை நான் விழுங்கினால் ஜீரணிப்பது மிகவும் கஷ்டமே. எனவே உன்னை விட்டு விடுகிறேன். நீ உன் வழியே போ" என்றான்.

பஞ்சாயுதனாக அவதரித்த போதிசத்வர் ராட்சஸனை ஆசீர்வதித்து "என்னை விட்டு விட்டாயா? ரொம்ப சரி. ஆனால் உன் விஷயம் என்ன? இப்படியே கெட்ட வழியில்தான் போய்க் கொண்டே இருக்கப் போகிறாயா? அஞ்ஞானம் என்ற இருளில் இருக்கிறாயே. நீ திருந்திவிடு. பிறரைத் துன்புறுத்தாதே நல்லறிவு பெற்று நற்செயல்களையே புரி" என்றார்.
ராட்சஸன் அவரது ஒளி மிகுந்த உருவத்தாலும், பேச்சாலும் அடங்கி ஒடுங்கிக் கை கூப்பி "ஐயா மகானுபாவரே! நான் நல்லறிவு பெற என்ன செய்ய வேண்டும்?" என்று பணிவுடன் கேட்டான்.
போதிசத்வரும் "நீ இக்காட்டு வழியே வருபவர்களைக் கொன்று தின்று பாரமாக்கிக் கொள்கிறாய். அப்படி பாவம் அதிகரிக்க அதிகரிக்க நீ இந்த மாதிரி ராட்சஸனாகத்தான் பிறந்து உழல்வாய். இதனால் உனக்கு என்றுமே நற்கதி கிட்டாது. நீ உயர்ந்த மானிடப் பிறவி அடைய வேண்டுமானால் இப்படிப் பாவச் செயல்களைப் புரியாதே" என்று அறிவுரைகளைக் கூறினார்.
அவர் கூறிய ஐந்து நெறிகளைக் கேட்ட ரோமாஞ்சனின் மனம் மாறியது. அன்று முதல் கொடிய பாவச் செயல்கள் புரிவதை விட்டு விட்டான். அது மட்டுமல்ல அவ்வழியே வரும் வழிப்போக்கர்களை உபசரித்து உணவளித்து நற்பெயர் பெற்றான். இப்படியாக பயங்கரக் கொள்ளைக்காரனாக இருந்த ரோமாஞ்சனை போதிசத்வர் தம் அறிவுரையால் நல்லவனாகத் திருத்தி விட்டார். ரோமாஞ்சனும் தன் கெட்ட செயல்களை விட்டு நல்லவனான்.

 

பேராசை


பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் செருப்புத் தைக்கும் குடும்பத்தில் ஒரு சிறு கிராமத்தில் அவதரித்தார். அவர் பெரியவராகித் தன் குலத்தொழிலைச் செய்து ஒரு சித்த யோகியை அணுகி அவரிடமிருந்து ஒரு அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொண்டார்.

அந்த மந்திரத்தைக் கொண்டு காய் காய்க்காத காலத்தில் கூட மாமரங்களில் மாம்பழங்களை வர வழைத்து அவற்றை விற்று வாழ்ந்து வந்தார். தினமும் காட்டிற்குப் போய் ஒரு மாமரத்தின் அருகே நின்று மந்திரம் ஓதியவாறே அவர் அதன் மீது நீரைத் தெளிக்க அம்மரம் பழங்களாகக் கீழே உதிர்த்து விழச் செய்யும். இவ்வாறு போதிசத்வர் செய்வதை ஒருநாள் சுநந்தன் என்ற அந்தண வாலிபன் பார்த்து விட்டான்.

அவன் எந்த வேலையும் செய்யாமல் தனக்குப் பணம் வந்து குவிந்து விட வேண்டும் என்று பகல் கனவு காண்பவன். அவன் போதிசத்வர் செய்த அற்புதத்தைக் கண்டதும் அவரிடம்இருந்து அந்த அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொண்டு விடுவது என அவன் தீர்மானித்து அப்போது முதல் போதிசத்வருக்குப் பணிவிடைகள் செய்யலானான். கீழே விழுந்த பழங்களை எடுத்து மூட்டையாகக் கட்டி சுமந்து கொண்டு அவர் பின் நடந்து அவர் வீட்டில் கொண்டு போய் இறக்கினான். அவருடைய வீட்டு வேலைகளை விழுந்து விழுந்து செய்தான்.

இதைக் கண்ட போதிசத்வர் தன் மனைவியிடம் "இவன் ஏன் இப்படி நமக்கு வேலை செய்கிறான் தெரியுமா? என்னிடமிருந்து அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொள்ளத் தான். இவன் அதனைக் கற்றுக் கொண்டாலும் வெகு சீக்கிரமே அதன் சக்தி இவனிடம் இல்லாமல் போய் விடும்" என்றார். அவரது மனைவியோ ‘பாவம்! எப்படி மாடு போல நம் வீட்டில் உழைக்கிறான்! நீங்கள் அவனுக்கு மந்திரத்தை உபதேசித்து விடுங்கள். பலிப்பதும் பலிக்காததும் அவனவன் தலை எழுத்தைப் பொறுத்தது" என்றாள்.

தேதி: 30th Jul, 2010ஆசிரியர்: அம்புலிமாமா

 போதிசத்வரும் தம் மனைவியின் வற்புறுத்தலின் பேரில் சுநந்தனுக்கு அந்த அபூர்வ மந்திரத்தை உபதேசித்து "நீ இதனை யாரிடமிருந்து கற்றாய் என்ற ரகசியத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் மறுவினாடியே உனக்கு இந்த மந்திரம் பலிக்காது" என்றார்.

சுநந்தனும் யாரிடமும் அந்த ரகசியத்தைக் கூறுவதில்லை என உறுதிமொழி அளித்து போதிசத்வரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அவன் தினமும் நிறைய மாம்பழங்களை மரங்களில் தான் உபதேசம் பெற்ற மந்திரத்தின் சக்தியால் வரவழைத்து அவற்றை விற்று நிறையப் பணம் அடைந்து வரலானான்.

இவ்வாறு சுநந்தன் வரவழைத்து விற்ற மாம்பழங்களில் ஒன்று காசி மன்னனுக்குக் கிடைத்தது. அவன் மாம்பழக் காலமில்லாத காலத்தில் மிகப் பெரிய ருசியான மாம்பழம் கிடைத்தது கண்டு ஆச்சரியப் பட்டான். அத்தகைய பழம் எங்கே கிடைத்தது என விசாரிக்கலானான். சுநந்தன் தான் அதனை விற்றவன் என்பதை அவன் தன் ஆட்களிடம்இருந்து தெரிந்து கொண்டான்.

அவன் உடனே சுநந்தனை அழைத்து விசாரிக்கவே சுநந்தனும் "என்னிடம் அபூர்வ மந்திரசக்தி உள்ளது. அதனால் இத்தகைய பழங்களை வரவழைக்கிறேன்" என்று ஜம்பம் அடித்துக் கூறினான். அரசனும் அந்த சக்தியைக் காண விரும்பவே சுநந்தனும் பலர் முன்னிலையில் அரசனின் தோட்டத்திலுள்ள ஒரு மாமரத்தின் முன்போய் நின்று அதன் மீது நீரைத் தெளித்து மந்திரத்தை உச்சரித்தான். மறு வினாடியே அம்மரத்தில் மாம்பழங்கள் தோன்றி கீழே விழுந்தன. இந்த அதிசயத்தைக் கண்டு காசி மன்னன் ஆச்சரியப் பட்டு "ஆகா! இந்த அற்புத மந்திரத்தை உனக்கு உபதேசித்த மகான் யார்? உடனே சொல்" என்று கேட்டான்.

சுநந்தன் முதலில் தான் அதனைக் கற்றது போதிசத்வரிடமிருந்து எனச் சொல்ல வேண்டாம் என நினைத்தான். ஆனால் அரசன் மீண்டும் மீண்டும் கேட்கவே சுநந்தனும் போதிசத்வர் எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல் தான் அந்த மந்திரத்தைக் கற்றது செருப்பு தைக்கும் குலத்தில் பிறந்த போதிசத்வரிடமிருந்து என்று கூறி விட்டான்.

இவ்வளவு சிரமப்பட்டு கற்ற மந்திரத்தின் சக்தி திடீரென்று தன்னை விட்டு விட்டுப் போய் விடவா போகிறது என அவன் எண்ணித் தன் குருவின் கட்டளையையும் மீறி ரகசியத்தை வெளியிட்டு விட்டான். காசி மன்னன் ஆச்சரியப் பட்டவாறே "அடேயப்பா! தாழ்குலத்தில் பிறந்த ஒருவனுக்கா இவ்வளவு சக்தி! பிராம்மணனாகிய நீ அவனிடம் உபதேசம் பெற்றது பற்றிக் கொஞ்சம் கூட வெட்கப் படவில்லையா?" என்று கேட்டான். சுநந்தனும் பதில் எதுவும் கூறாமல் தலைகுனிந்தவாறே அங்கிருந்து சென்றான்.

ஓரிரண்டு மாதங்களாயின காசி மன்னனுக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே அவன் சுநந்தனை அழைத்து வரச் சொன்னான். சுநந்தன் வந்ததும் காசி மன்னன் அவனிடம் மந்திரத்தை உச்சரித்து முன் செய்தது போல இப்போதும் தனக்கு மாம்பழங்கள் வரவழைத்துக் கொடுக்கும்படிக் கூறினான். சுநந்தனும் மிகவும்
கர்வத்தோடு முன் போல அரசனின் தோட்டத்திற்குப் போனான். அவனோடு காசி மன்னனும் மற்றும் பலரும் சென்றார்கள். சுநந்தனும் ஒரு மாமரத்தின் முன் நின்று அதன் மீது நீரைத் தெளித்து மந்திரத்தை உச்சரிக்க முயன்றான். ஆனால் அவனுக்கு மந்திரமே ஞாபகத்திற்கு வரவில்லை.

காசி மன்னனும் மற்றவர்களும் அது கண்டு ஆச்சரியப்பட்டனர். அப்போது சுநந்தன் "நான் என் குருவின் கட்டளையை மீறினேன். நான் யாரிடமிருந்து இந்த மந்திரத்தைக் கற்றேன் என்ற ரகசியத்தைக் காசி மன்னனிடம் கூறினேன். அதனால் எனக்கு அப்போது முதல் மந்திரம் பலிக்காது போயிற்று" என்று எல்லாரிடமும் கூறி விட்டு தலைகுனிந்தவாறே தன் வீட்டிற்குச் சென்றான்.

 

சிறுகதை - காசிக்குப் போறேன்

ஒருவர் காசியாத்திரை செல்ல நினைத்தார். அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காலம். காசிக்குப் போய் திரும்பி வரவே ஆறு மாதங்களுக்கு மேலாகலாம். வனப்பகுதி வழியாக  செல்லும்போது, சிங்கம், புலி அடித்துச் செத்துப் போய் திரும்பாமலும் போகலாம். அதனால், காசி யாத்திரை புறப்பட்டவர், காசிக்குச் செல்லும் முன்பே தனது சொத்தை தன் மூன்று மகன்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டார். தனக்கு என்று எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. திரும்பி வருவோம் என்பதும் உறுதியில்லை. ஒருவேளை அப்படியே திரும்பி வந்தாலும், ஏதாவது ஒரு மகன், ஒரு வாய் கஞ்சி ஊற்ற மாட்டானா என்ற நம்பிக்கை தான். காசி யாத்திரை சென்றவர் அதிர்ஷ்டக்காரர் என்று தான் சொல்ல வேண்டும். ஆறு மாதத்திற்கு முன்பே பத்திரமாகத் திரும்பி வந்து விட்டார். தனது ஒவ்வொரு மகன்களும் எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

மூத்த மகன் வீட்டுக்குச் சென்றார்.
""மகனே! சவுக்கியமா? உன் மனைவி, குழந்தை குட்டிகள் நலமா? வாழ்க்கை எப்படி ஓடுகிறது? நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்?'' என்று நேரடியாகக் கேட்காமல் சுற்றி வளைத்துக் கேட்டார். ""நீங்கள் கொடுத்த பணத்தைப் பார்த்ததும் என் மனைவி, தனக்கு நகைகள், பட்டுப்புடவை வேண்டும் என்றாள். அந்தப் பணத்திற்கு எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டேன். தினக்கூலி வேலைக்கு சென்று தான் காலம் ஓடுகிறது. அதனால், நீங்கள் பணம் கொடுத்தும் எனக்கு எந்தப் பயனும் இல்லையப்பா!'' என்று சலித்துக் கொண்டான் அவன்.
இன்னொரு மகன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க அவன் வீடு சென்றார். ""மகனே! உன் வாழ்க்கை எப்படியிருக்கிறது. நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்?'' என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.
""பத்திரமாக அப்படியே இருக்கிறது அப்பா. அதிலிருந்து ஒரு பைசாகூட எடுக்கவில்லை. அப்படியே அந்தப் பணத்தை நெற்குதிருக்கு அடியில் ஒரு குழி தோண்டிப் புதைத்து பத்திரமாக வைத்துள்ளேன். எடுத்துக் காண்பிக்கட்டுமா தந்தையே?'' என்றான்.
அவனை விட இவன் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். மூன்றாவது மகனிடம் சென்றார்.
""என்னப்பா... நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்? சவுகரியமாக இருக்கிறாயா? காசிக்குப் போனாலும் உங்கள் நினைப்பு தான். எப்படி இருக்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.''
""காசிக்குப் போயும் கர்மம் தொலையவில்லை என்பது இதுதான் போலும். அதற்கு நீங்கள் காசிக்கே போயிருக்க வேண்டாம். இங்கிருந்து கொண்டே நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமே!
""பணத்தைப் பற்றி கேட்டீர்கள் அல்லவா? அதை மூலதனமாக வைத்து ஒரு சிறிய பெட்டிக் கடை ஆரம்பித்தேன். நம் ஊரில் கடையே இல்லையா? என் கடை ஊருக்கே பெரிதும் உபயோகமாக இருக்கிறது. எனக்கும் நல்ல லாபம்.
""இவ்வளவுக்கும், குறைந்த லாபம் வைத்துத்தான் விற்கிறேன். அப்படியும் நிறைய விற்பதால் லாபம் அதிகரித்துவிட்டது. கடையிலுள்ள சரக்கு, கையிலுள்ள ரொக்கம் எல்லாம் ஆயிரத்திற்கும் மேல் இருக்கிறது. இந்த ஆறு மாத காலமாக, கடை வியாபாரத்தில் வந்த லாபத்தில்தான் குடும்பமே நடந்தது!'' என்று கூறினான்.
""அப்பா! என் வீட்டிலேயே இருங்கள். நீங்கள் கடையில் அமர்ந்து கல்லாவை பார்த்துக் கொண்டால் போதும்... நான், சரக்குகள் எடுத்து வருவது போன்ற வெளி வேலைகளைச் செய்வேன். இன்னொரு கடையும் மலிவான விலைக்கு வருகிறது அப்பா... அதையும் வாங்கிப் போடப் போறேன்,'' என்றான் மகன். அதிசயத்துப் போனார் தகப்பனார். ஒன்றை பத்தாக்கும் புத்திசாலித்தனம் வேண்டும். அதைச் சின்ன மகன் நன்கு தெரிந்து வைத்துள்ளான் என்பதை நினைத்து மகிழ்ந்தார். மூன்று பேருக்கும் ஒரே மாதிரியாகத்தான் பணம் கொடுத்தார். இருந்தும் மூவரும் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்ட முறையில்தான் எவ்வளவு வேறுபாடு பார்த்தீர்களா குட்டீஸ்... மூளையை யூஸ் பண்ணுங்க.



???

 நம் மக்கள்தான் அரசியல் பேசி, வெட்டி பொழுது போக்கிக் கொண்டிருக்கின்றனரா?

இல்லை; அமெரிக்கர்களுக்குத் தான் இதில் முதல் இடம். அங்கே 100க்கு 37 பேரும், சீனாவில் 21 பேரும், இந்தியாவில் 15 பேரும் இப்படி வெட்டி பொழுது போக்குகின்றனர் என்கிறது, "இன்டர்நேஷனல் ரிசர்ச் அசோசியேஷன்!' என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம்!