பேராசை


பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் செருப்புத் தைக்கும் குடும்பத்தில் ஒரு சிறு கிராமத்தில் அவதரித்தார். அவர் பெரியவராகித் தன் குலத்தொழிலைச் செய்து ஒரு சித்த யோகியை அணுகி அவரிடமிருந்து ஒரு அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொண்டார்.

அந்த மந்திரத்தைக் கொண்டு காய் காய்க்காத காலத்தில் கூட மாமரங்களில் மாம்பழங்களை வர வழைத்து அவற்றை விற்று வாழ்ந்து வந்தார். தினமும் காட்டிற்குப் போய் ஒரு மாமரத்தின் அருகே நின்று மந்திரம் ஓதியவாறே அவர் அதன் மீது நீரைத் தெளிக்க அம்மரம் பழங்களாகக் கீழே உதிர்த்து விழச் செய்யும். இவ்வாறு போதிசத்வர் செய்வதை ஒருநாள் சுநந்தன் என்ற அந்தண வாலிபன் பார்த்து விட்டான்.

அவன் எந்த வேலையும் செய்யாமல் தனக்குப் பணம் வந்து குவிந்து விட வேண்டும் என்று பகல் கனவு காண்பவன். அவன் போதிசத்வர் செய்த அற்புதத்தைக் கண்டதும் அவரிடம்இருந்து அந்த அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொண்டு விடுவது என அவன் தீர்மானித்து அப்போது முதல் போதிசத்வருக்குப் பணிவிடைகள் செய்யலானான். கீழே விழுந்த பழங்களை எடுத்து மூட்டையாகக் கட்டி சுமந்து கொண்டு அவர் பின் நடந்து அவர் வீட்டில் கொண்டு போய் இறக்கினான். அவருடைய வீட்டு வேலைகளை விழுந்து விழுந்து செய்தான்.

இதைக் கண்ட போதிசத்வர் தன் மனைவியிடம் "இவன் ஏன் இப்படி நமக்கு வேலை செய்கிறான் தெரியுமா? என்னிடமிருந்து அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொள்ளத் தான். இவன் அதனைக் கற்றுக் கொண்டாலும் வெகு சீக்கிரமே அதன் சக்தி இவனிடம் இல்லாமல் போய் விடும்" என்றார். அவரது மனைவியோ ‘பாவம்! எப்படி மாடு போல நம் வீட்டில் உழைக்கிறான்! நீங்கள் அவனுக்கு மந்திரத்தை உபதேசித்து விடுங்கள். பலிப்பதும் பலிக்காததும் அவனவன் தலை எழுத்தைப் பொறுத்தது" என்றாள்.

தேதி: 30th Jul, 2010ஆசிரியர்: அம்புலிமாமா

 போதிசத்வரும் தம் மனைவியின் வற்புறுத்தலின் பேரில் சுநந்தனுக்கு அந்த அபூர்வ மந்திரத்தை உபதேசித்து "நீ இதனை யாரிடமிருந்து கற்றாய் என்ற ரகசியத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் மறுவினாடியே உனக்கு இந்த மந்திரம் பலிக்காது" என்றார்.

சுநந்தனும் யாரிடமும் அந்த ரகசியத்தைக் கூறுவதில்லை என உறுதிமொழி அளித்து போதிசத்வரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அவன் தினமும் நிறைய மாம்பழங்களை மரங்களில் தான் உபதேசம் பெற்ற மந்திரத்தின் சக்தியால் வரவழைத்து அவற்றை விற்று நிறையப் பணம் அடைந்து வரலானான்.

இவ்வாறு சுநந்தன் வரவழைத்து விற்ற மாம்பழங்களில் ஒன்று காசி மன்னனுக்குக் கிடைத்தது. அவன் மாம்பழக் காலமில்லாத காலத்தில் மிகப் பெரிய ருசியான மாம்பழம் கிடைத்தது கண்டு ஆச்சரியப் பட்டான். அத்தகைய பழம் எங்கே கிடைத்தது என விசாரிக்கலானான். சுநந்தன் தான் அதனை விற்றவன் என்பதை அவன் தன் ஆட்களிடம்இருந்து தெரிந்து கொண்டான்.

அவன் உடனே சுநந்தனை அழைத்து விசாரிக்கவே சுநந்தனும் "என்னிடம் அபூர்வ மந்திரசக்தி உள்ளது. அதனால் இத்தகைய பழங்களை வரவழைக்கிறேன்" என்று ஜம்பம் அடித்துக் கூறினான். அரசனும் அந்த சக்தியைக் காண விரும்பவே சுநந்தனும் பலர் முன்னிலையில் அரசனின் தோட்டத்திலுள்ள ஒரு மாமரத்தின் முன்போய் நின்று அதன் மீது நீரைத் தெளித்து மந்திரத்தை உச்சரித்தான். மறு வினாடியே அம்மரத்தில் மாம்பழங்கள் தோன்றி கீழே விழுந்தன. இந்த அதிசயத்தைக் கண்டு காசி மன்னன் ஆச்சரியப் பட்டு "ஆகா! இந்த அற்புத மந்திரத்தை உனக்கு உபதேசித்த மகான் யார்? உடனே சொல்" என்று கேட்டான்.

சுநந்தன் முதலில் தான் அதனைக் கற்றது போதிசத்வரிடமிருந்து எனச் சொல்ல வேண்டாம் என நினைத்தான். ஆனால் அரசன் மீண்டும் மீண்டும் கேட்கவே சுநந்தனும் போதிசத்வர் எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல் தான் அந்த மந்திரத்தைக் கற்றது செருப்பு தைக்கும் குலத்தில் பிறந்த போதிசத்வரிடமிருந்து என்று கூறி விட்டான்.

இவ்வளவு சிரமப்பட்டு கற்ற மந்திரத்தின் சக்தி திடீரென்று தன்னை விட்டு விட்டுப் போய் விடவா போகிறது என அவன் எண்ணித் தன் குருவின் கட்டளையையும் மீறி ரகசியத்தை வெளியிட்டு விட்டான். காசி மன்னன் ஆச்சரியப் பட்டவாறே "அடேயப்பா! தாழ்குலத்தில் பிறந்த ஒருவனுக்கா இவ்வளவு சக்தி! பிராம்மணனாகிய நீ அவனிடம் உபதேசம் பெற்றது பற்றிக் கொஞ்சம் கூட வெட்கப் படவில்லையா?" என்று கேட்டான். சுநந்தனும் பதில் எதுவும் கூறாமல் தலைகுனிந்தவாறே அங்கிருந்து சென்றான்.

ஓரிரண்டு மாதங்களாயின காசி மன்னனுக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே அவன் சுநந்தனை அழைத்து வரச் சொன்னான். சுநந்தன் வந்ததும் காசி மன்னன் அவனிடம் மந்திரத்தை உச்சரித்து முன் செய்தது போல இப்போதும் தனக்கு மாம்பழங்கள் வரவழைத்துக் கொடுக்கும்படிக் கூறினான். சுநந்தனும் மிகவும்
கர்வத்தோடு முன் போல அரசனின் தோட்டத்திற்குப் போனான். அவனோடு காசி மன்னனும் மற்றும் பலரும் சென்றார்கள். சுநந்தனும் ஒரு மாமரத்தின் முன் நின்று அதன் மீது நீரைத் தெளித்து மந்திரத்தை உச்சரிக்க முயன்றான். ஆனால் அவனுக்கு மந்திரமே ஞாபகத்திற்கு வரவில்லை.

காசி மன்னனும் மற்றவர்களும் அது கண்டு ஆச்சரியப்பட்டனர். அப்போது சுநந்தன் "நான் என் குருவின் கட்டளையை மீறினேன். நான் யாரிடமிருந்து இந்த மந்திரத்தைக் கற்றேன் என்ற ரகசியத்தைக் காசி மன்னனிடம் கூறினேன். அதனால் எனக்கு அப்போது முதல் மந்திரம் பலிக்காது போயிற்று" என்று எல்லாரிடமும் கூறி விட்டு தலைகுனிந்தவாறே தன் வீட்டிற்குச் சென்றான்.

 

சிறுகதை - காசிக்குப் போறேன்

ஒருவர் காசியாத்திரை செல்ல நினைத்தார். அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாத காலம். காசிக்குப் போய் திரும்பி வரவே ஆறு மாதங்களுக்கு மேலாகலாம். வனப்பகுதி வழியாக  செல்லும்போது, சிங்கம், புலி அடித்துச் செத்துப் போய் திரும்பாமலும் போகலாம். அதனால், காசி யாத்திரை புறப்பட்டவர், காசிக்குச் செல்லும் முன்பே தனது சொத்தை தன் மூன்று மகன்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டார். தனக்கு என்று எதுவும் வைத்துக்கொள்ளவில்லை. திரும்பி வருவோம் என்பதும் உறுதியில்லை. ஒருவேளை அப்படியே திரும்பி வந்தாலும், ஏதாவது ஒரு மகன், ஒரு வாய் கஞ்சி ஊற்ற மாட்டானா என்ற நம்பிக்கை தான். காசி யாத்திரை சென்றவர் அதிர்ஷ்டக்காரர் என்று தான் சொல்ல வேண்டும். ஆறு மாதத்திற்கு முன்பே பத்திரமாகத் திரும்பி வந்து விட்டார். தனது ஒவ்வொரு மகன்களும் எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.

மூத்த மகன் வீட்டுக்குச் சென்றார்.
""மகனே! சவுக்கியமா? உன் மனைவி, குழந்தை குட்டிகள் நலமா? வாழ்க்கை எப்படி ஓடுகிறது? நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்?'' என்று நேரடியாகக் கேட்காமல் சுற்றி வளைத்துக் கேட்டார். ""நீங்கள் கொடுத்த பணத்தைப் பார்த்ததும் என் மனைவி, தனக்கு நகைகள், பட்டுப்புடவை வேண்டும் என்றாள். அந்தப் பணத்திற்கு எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டேன். தினக்கூலி வேலைக்கு சென்று தான் காலம் ஓடுகிறது. அதனால், நீங்கள் பணம் கொடுத்தும் எனக்கு எந்தப் பயனும் இல்லையப்பா!'' என்று சலித்துக் கொண்டான் அவன்.
இன்னொரு மகன் எப்படியிருக்கிறான் என்று பார்க்க அவன் வீடு சென்றார். ""மகனே! உன் வாழ்க்கை எப்படியிருக்கிறது. நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்?'' என்று நேரடியாகவே கேட்டுவிட்டார்.
""பத்திரமாக அப்படியே இருக்கிறது அப்பா. அதிலிருந்து ஒரு பைசாகூட எடுக்கவில்லை. அப்படியே அந்தப் பணத்தை நெற்குதிருக்கு அடியில் ஒரு குழி தோண்டிப் புதைத்து பத்திரமாக வைத்துள்ளேன். எடுத்துக் காண்பிக்கட்டுமா தந்தையே?'' என்றான்.
அவனை விட இவன் கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்துக் கொண்டார். மூன்றாவது மகனிடம் சென்றார்.
""என்னப்பா... நான் கொடுத்த பணத்தை என்ன செய்தாய்? சவுகரியமாக இருக்கிறாயா? காசிக்குப் போனாலும் உங்கள் நினைப்பு தான். எப்படி இருக்கிறீர்களோ, என்ன செய்கிறீர்களோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.''
""காசிக்குப் போயும் கர்மம் தொலையவில்லை என்பது இதுதான் போலும். அதற்கு நீங்கள் காசிக்கே போயிருக்க வேண்டாம். இங்கிருந்து கொண்டே நாங்கள் எப்படி இருக்கிறோம் என்று பார்த்துக் கொண்டிருந்திருக்கலாமே!
""பணத்தைப் பற்றி கேட்டீர்கள் அல்லவா? அதை மூலதனமாக வைத்து ஒரு சிறிய பெட்டிக் கடை ஆரம்பித்தேன். நம் ஊரில் கடையே இல்லையா? என் கடை ஊருக்கே பெரிதும் உபயோகமாக இருக்கிறது. எனக்கும் நல்ல லாபம்.
""இவ்வளவுக்கும், குறைந்த லாபம் வைத்துத்தான் விற்கிறேன். அப்படியும் நிறைய விற்பதால் லாபம் அதிகரித்துவிட்டது. கடையிலுள்ள சரக்கு, கையிலுள்ள ரொக்கம் எல்லாம் ஆயிரத்திற்கும் மேல் இருக்கிறது. இந்த ஆறு மாத காலமாக, கடை வியாபாரத்தில் வந்த லாபத்தில்தான் குடும்பமே நடந்தது!'' என்று கூறினான்.
""அப்பா! என் வீட்டிலேயே இருங்கள். நீங்கள் கடையில் அமர்ந்து கல்லாவை பார்த்துக் கொண்டால் போதும்... நான், சரக்குகள் எடுத்து வருவது போன்ற வெளி வேலைகளைச் செய்வேன். இன்னொரு கடையும் மலிவான விலைக்கு வருகிறது அப்பா... அதையும் வாங்கிப் போடப் போறேன்,'' என்றான் மகன். அதிசயத்துப் போனார் தகப்பனார். ஒன்றை பத்தாக்கும் புத்திசாலித்தனம் வேண்டும். அதைச் சின்ன மகன் நன்கு தெரிந்து வைத்துள்ளான் என்பதை நினைத்து மகிழ்ந்தார். மூன்று பேருக்கும் ஒரே மாதிரியாகத்தான் பணம் கொடுத்தார். இருந்தும் மூவரும் அந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொண்ட முறையில்தான் எவ்வளவு வேறுபாடு பார்த்தீர்களா குட்டீஸ்... மூளையை யூஸ் பண்ணுங்க.



???

 நம் மக்கள்தான் அரசியல் பேசி, வெட்டி பொழுது போக்கிக் கொண்டிருக்கின்றனரா?

இல்லை; அமெரிக்கர்களுக்குத் தான் இதில் முதல் இடம். அங்கே 100க்கு 37 பேரும், சீனாவில் 21 பேரும், இந்தியாவில் 15 பேரும் இப்படி வெட்டி பொழுது போக்குகின்றனர் என்கிறது, "இன்டர்நேஷனல் ரிசர்ச் அசோசியேஷன்!' என்ற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம்!

நவீன பஞ்சதந்திரக் கதை-20

எறும்பு எக்ஸ்பிரஸ்!
அந்த ரயில் எங்குமே நிற்காது... புற்றிலிருந்து கிளம்பினால் நேரே உணவு இருக்கும் இடம் எவ்வளவு தூரமென்றாலும் சரி 'கூ..கூ... சிக்கு... புக்கு.... சூப்பர்ஃபாஸ்ட்... உணவை தேடி கண்டுபிடித்து... பிறகு உணவை எடுத்து கொண்டு மீண்டும் புற்றை நோக்கி திரும்பும் எறும்பு எக்ஸ்பிரஸ்!

பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் அதே தான் என்ன ஒரு வேகம்..! வழியில் யாராவது குறுக்கே போனால்... அவ்வளவுதான் சிக்கு... புக்கு... உடம்பெல்லாம் ஊசி போட்டு பிடுங்கிவிடும்.

அன்று அந்த எறும்பு எக்ஸ்பிரஸ் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. "சீக்கிரம், ம்..." ராணியாரின் கட்டளைக்குரல் கேட்டுகொண்டே இருந்தது.

"மழைக்காலம் நெருங்கிவிட்டது. இன்னும் புற்றில் நிறைய வேலைகள் இருக்கிறது" என்று பரபரத்து கொண்டிருந்தது. ஏற்கெனவே பல்வேறு தானிய அறைகள் நிரம்பி இருந்தாலும் மேலும் மேலும் எறும்பு எக்ஸ்பிரஸில் உணவுகள் கொண்டு வரப்பட்டு அறைகள் அனைத்தும் தொடர்ந்து நிரப்பப்பட்டு கொண்டேயிருந்தன. பரபரப்புடன் எறும்புகள் இயங்கி கொண்டிருந்தன. அப்போது ஒரு ஜூனியர் எறும்பு மட்டும் ராணியாரை நோக்கி ஒரு கேள்வியுடன் சென்றது.

"மன்னிக்க வேண்டும் ராணியாரே! உங்களிடம் ஒரு முக்கிய கோரிக்கை" என்றது.

தன் முன் நின்று கொண்டிருந்த ஜூனியர் எறும்பை பார்த்த ராணியார் புன்னகைத்தார்...

"மம்... என்ன?" ஆனால் குரலில் மட்டும் கொஞ்சம் கடுமை.

"ராணியார் அவர்களே, ஏற்கெனவே புற்றில் எக்கச்சக்கமாக உணவு கையிருப்பாக இருக்கிறது..." என்றது பேச்சை இழுத்தது ஜூனியர் எறும்பு.

"அது எனக்கும் தெரியும்... அதிகப் பிரசங்கி..." என்று ஆரம்பத்திலேயே குட்டு வைத்தார் ராணியார்.

"இ... இல்லை... மன்னிச்சுடுங்க" என்று ஜூனியர் சமாளிப்பதற்குள், அங்கு மற்ற ஜுனியர் எறும்புகளின் கூட்டமே கூடிவிட்டதையும் ராணியார் கவனிக்க தவறவில்லை.

"ஏன் மேலும் மேலும் தானிய உணவு வந்துகொண்டே இருக்கவேண்டும்... கொஞ்சம் 'ரெஸ்ட்’ எடுக்கலாமே. நாங்க விளையாடக்கூட அனுமதிக்கப் படுவது இல்லை. எங்க அப்பா அம்மாவுக்கு எக்ஸ்பிரஸ் ஓட்ட உதவி செய்தே பொழுதுபோய்விடுகிறது..." என்று கேள்வியை ஒரு வழியாக கேட்டே விட்டது அந்த ஜூனியர் எறும்பு.

"இருப்பதை சாப்பிட்டுவிட்டு பிறகு மறுபடியும் உணவு தேடலாமே?" இது இன்னொரு ஜூனியரின் தைரியக்குரல்.

"அன்பு எறும்புக்குழந்தைகளே..." ராணியார் பரிவுடன் பேசத் தொடங்கினார்.

"நாம் எறும்பு இனத்தை சேர்ந்தவர்கள். மனிதர்களுக்கே சுறுசுறுப்பை கற்றுக்கொடுத் தவர்கள் நாம்தான். உழைக்கும் நேரத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்... அப்போதுதான் ஓய்வுநேரத்தில் நிம்மதியாக இருக்க முடியும். உங்களுக்கு விளக்கமாக ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்" என்று கதை சொல்ல ஆரம்பித்தது ராணியார்கள். ஜூனியர் எறும்புகளும் கதை கேட்க தயாராகின.

"ஒரு காலத்தில் நம் எறும்பு ராஜாவை பார்த்து வெட்டுக்கிளி ஒன்று கேலி செய்தது.

'நான் ஜாலியாக இருக்கிறேன்.ஆனால், நீ மட்டும் எப்போது பார்த்தாலும் உழைத்து கொண்டே இருக்கிறாய். உனக்கே இது அசிங்கமாக இல்லையா..." என்று கூறி பரிகாசித்தது. ஆனால் அதை பொருட் படுத்தாமல் நம் எறும்பு ராஜா உழைத்து உழைத்து புற்றில் உணவு சேர்த்து கொண்டேயிருந்தார்.

ஒருநாள் கடும் மழை பெய்தது. குளிரும் அடித்தது. இதனால் வெட்டுக்கிளி மிகவும் அவதிப்பட்டது. நம் எறும்பு ராஜாவிடம் வந்து, "எறும்பு ராஜா, கொஞ்சம் வெளியே வாருங்கள்" என்று அழைத்தது. வெளியில் வந்த எறும்பு ராஜா, "ராஜா என்று இங்கு யாருமில்லை. எல்லோருமே உழைப்பாளிகள்தான்" என்றது.

"வெளியில் பயங்கர மழையாக இருக்கிறது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. நான்கு நாட்களாக நான் பட்டினி... ஆமாம், நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?!" என்றது வெட்டுக்கிளி.

"மழைக்காலத்துக்கு முன்பு உழைத்து சேர்த்ததை இப்போது சாப்பிட்டு ஓய்வாக நிம்மதியாக இருக்கிறேன்" என்றது எறும்பு ராஜா. எறும்பு கூட்டத்தில் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறு வெட்டுக்கிளி எவ்வளவோ கெஞ்சியது. ஆனால், எறும்பு ராஜா மறுத்துவிட்டார்.

இந்த கதையை தான் மனிதர்கள் பள்ளியிலும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்" என்று கதை சொல்லி முடித்தது ராணியார். வேறு எதுவும் பேசாமல் ஜூனியர் எறும்புகள் எக்ஸ்பிரஸ் ரயிலை வேகமாக விரட்டி சென்றன.

சரியா....தப்பா?!

''டேய் விக்கி, நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்கே?! உன் நண்பன் ராகுல் எவ்வளவு 'ஸ்மார்ட்டா' இருக்கிறான். அவனை பார்த்து திருந்த முயற்சி செய்" - இது என் வீட்டுலையும், வகுப்பிலும் நான் அடிக்கடி கேட்கிற வசனம்!

அப்படி எந்த விதத்தில் ராகுலைவிட நான் குறைஞ்சு போயிட்டேன்னு எனக்கு தெரியலைங்க. நானும் ராகுல் செய்ற டெக்னிக்ஸை யூஸ் பண்ணி பார்க்கறேன். ஆனா, அவனை எல்லாரும் பாராட்டுறாங்க. என்னை மட்டும் திட்டுறாங்க.

ஒருநாள் விளையாட்டு வகுப்பின் போது ராகுலுக்கும், கௌதமுக்கும் சரியான சண்டை! இந்த கௌதம் இருக்குறானே, அவன் எப்பவும் எல்லாரையும் திட்டிக்கிட்டே இருப்பான். அன்றைக்கும் ராகுலைப் பார்த்து 'சப்பை மூக்கு'ன்னு செல்லிட்டான். உடனே, ராகுல் என்ன செஞ்சான் தெரியுமா? டீச்சர்கிட்ட போய், ''உங்களை 'சப்பை மூக்கு' ன்னு கௌதம் சொல்றான்"ன்னு மாட்டி விட்டுட்டான்.

டீச்சரும், டென்ஷனாகி கௌதமை கூப்பிட்டு பள்ளியில் இருக்குற செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊத்தச் சொல்லிட்டாங்க. இந்த சம்பவத்துக்கு பிறகு கௌதம் யாரையுமே திட்டுவதில்லை. இது தெரிஞ்சு ராகுலோட 'ஸ்மார்ட்னெஸ்ஸை' வகுப்பில் எல்லோரும் பாராட்டினாங்க. இன்னொரு நாள் வருண் என்னை கீழே தள்ளி விட்டுட்டான். உடனே நானும், ராகுல் மாதிரியே டீச்சர்கிட்டே போய், ''டீச்சர், உங்களை வருண் கீழே தள்ளி விட்டுட்டான்"-னு சொன்னேன். டீச்சர், என்னை ஒரு நிமிஷம் முறைச்சுப் பார்த்தாங்க. ''நான் வேணா வருணை கூப்பிடட்டா டீச்சர்?" என்று திரும்பினேன். டீச்சர், என்னை பக்கத்தில் வரச்சொல்லி என் காதை திருகி கிரவுண்டில் கிடக்கும் குப்பை பேப்பர் எல்லாத்தையும் பொறுக்க வைச்சிட்டாங்க.

நீங்களே சொல்லுங்க, நான் செஞ்சது தப்பா?! நானும் ராகுல் மாதிரிதானே செஞ்சேன், பின்னர் ஏன் டீச்சர் எனக்கு மட்டும் தண்டனை கொடுத்தாங்க. ஒண்ணுமே புரியலையே! உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்களேன்!


கதை -இருட்டு!

ராம் பத்து வயது பையன். அன்று பௌர்ணமி...

அந்த பௌர்ணமி நிலா, மல்லிகைப் பூவை போல வெண்மையாகவும், அம்மா வைக்கும் நெற்றி பொட்டை போல் வட்டமாகவும் கள்ளம் கபடமற்று சிரித்தது.

ராம், தன் செல்ல நாய்க் குட்டியுடன் இரவில் அந்த சாலையில் நடந்து சென்றான். அப்போது அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

'இவ்வளவு வெளிச்சமாக அழகாக இருக்கும் நிலா, அடுத்த பதினைந்து நாட்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இருட்டாகி விடுகிறதே..! ஏன்? கடவுள் நிலாவை, சூரியனைப் போல் தினமும் ஏன் ஒளிர விடவில்லை? நிலா, எல்லா நாட்களும் வெளிச்சமாக இருந்தால், நன்றாக இருக்குமே..?' என்று எண்ணினான்.

அப்போது அந்த பக்கமாக ஒரு முதியவர் தட்டுத்தடுமாறி செல்வதை கவனித்தான். அவரிடம் பேசினான்.

''தாத்தா, உங்களுடன் துணைக்கு ஒருவரை கூட்டிக் கொண்டு வர வேண்டியது தானே?" என்றான்.

''என் பேரனை காலையில் இருந்து காணவில்லை. அவனைதான் தேடிக்கிட்டு இருக்கிறேன். அதனாலதான் இருட்டு என்று கூட பார்க்காமல் அவனை தேடிக் கொண்டு வந்தேன்" என்றார்.

''தாத்தா என்ன சொல்றீங்க?! நல்லா வெளிச்சமாகத்தானே இருக்கிறது..." என்றான் ராம்.

''எனக்கு மாலைக்கண் நோய் இருக்குது. ஆறு மணிக்கு மேல் எனக்கு கண் தெரியாது. அதற்கு பிறகு எல்லாமே எனக்கு இருட்டுதான்" என்று தழுதழுத்த குரலில் சொன்னார் தாத்தா. ''கவலைப்படாதீங்க தாத்தா, உங்க பேரனை கண்டுபிடிக்க நான் உதவி செய்கிறேன். நாளை காலையில் இரண்டு பேரும் சேர்ந்தே அவனை தேடலாம். ஆனால், தாத்தா எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அதை தீர்த்து வைப்பீங்களா?!" என்றான் ராம்.

''கேளுப்பா..." என்றார் தாத்தா.

''தாத்தா, நிலா தினமும் வெளிச்சமாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். ஆனால், ஏன் 15 நாட்களில் நிலவு இருட்டாவது போல் இறைவன் படைத்து விட்டார். இதுதான் எனக்கு புரியவில்லை" என்றான்.

'தம்பி, எங்களை போன்ற மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கும் இந்த நிலவு வாழ்க்கைதான்! அதை சக மனிதர்கள் உணருவதற்காகதான் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நிலவிலும் இந்த இருட்டு&வெளிச்சப் பாடம்!

ஒரு மனிதன் வெளிச்சத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் அதனால் விரைவில் அவன் கண் கெட்டுப்போகும். நடுவில் இருட்டு வந்து போனால்தான் வெளிச்சத்தின் அருமை புரியும். அதுபோல, வெற்றியையே சந்திக்கும் ஒருவன் தோல்வியையும் சந்தித்தால்தான், மீண்டும் உத்வேகத்துடன் நினைத்ததை அவனால் அடைய முடியும். இருட்டை உணர்ந்தால்தான் வாழ்க்கை பயணமும் இனிதாய் அமையும்" என்றார் தாத்தா.

சந்தேகம் தீர்ந்த சந்தோஷத்தில் பௌர்ணமி நிலவு போல் ராம் முகம் மலர்ந்தது.



நவீன பஞ்சதந்திரக் கதை -19

மனுஷங்க மாறிட்டாங்க....

காக்கா ஸ்கூல் தொடங்கிவிட்டது.

அட, இதென்ன காக்கா ஸ்கூல் என்று யோசிக்கிறீர்களா?! தினமும் மாலை 5 மணிக்கு எல்லா காக்கைகளும் கூடு திரும்புவதற்கு முன்பு ஆங்காங்கே கொஞ்ச நேரம் மின்கம்பம், புளியமரம், அரசமரம், ஆலமரம் போன்ற இடங்களில் உட்கார்ந்து கொண்டு 'கா... கா'என கத்திக் கொண்டு இருக்குமே... அதுதான் இங்கு காக்கா ஸ்கூல்.

இதோ அரசமர பேருந்து நிலையத்தில் காக்கா ஸ்கூல் தொடங்கிவிட்டது. குஞ்சு காகம் முதல் வயதான காகங்கள் வரை அனைத்தும் ஆஜராகியிருந்தன. 'இன்னைக்கு டீச்சர் என்ன பாடம் நடத்துவாங்களோ...தெரியலையே?!'என்று குஞ்சு காகங்கள் எல்லாம் கா... கா... மொழியில் பேசிக்கொண்டு இருந்தன.

அப்போது வயதான அண்டங்காக்கா ஒன்று வந்து அரசமரத்தின் ஒரு கிளையில் அமர்ந்தது.

"நண்பர்களே, எல்லோரும் வந்து விட்டார்களா?" என்றது.

"தலைவரே, எல்லோரும் வந்துட்டாங்க... குழந்தைங்க ரொம்ப ஆர்வமா இருக்குதுங்க. சீக்கிரமா பாடத்தை ஆரம்பிங்க" என்றது இருட்டு நிற காக்கா.

"குழந்தைகளே, இன்னைக்கு நாம சுற்றுச்சூழல் பத்தி பேசப்போறோம். குறிப்பா மனுஷங்க சுற்றுச்சூழலை எப்படி கெடுத்துட்டு வர்றாங்கன்னு சொல்லப்போறேன். இதன் மூலம் எதிர்காலத்துல நீங்க ஜாக்கிரதையா இருக்கலாம்" என்று சொல்லிவிட்டு பாடத்தை ஆரம்பித்தது அண்டங் காக்கா. குஞ்சு காகங்கள் எல்லாம் சிரத்தையுடன் பாடத்தை கவனிக்க ஆயத்தமாயின.

"நகரத்தில் சுற்றுச்சூழல் ரொம்பவும் மோசமாகிப் போச்சு. ரோட்டை விரிவுபடுத்துற, பாலங்கட்டுறன்னு சொல்லி மரங்களை எல்லாம் வெட்டிக்கிட்டே வர்றாங்க. இதனால நம்மோட தோழர்கள் பலர் தங்கள் வீடுகளை இழந்துட்டே வர்றாங்க. அதுமட்டுமில்லாம தண்ணீரும் ரொம்பவே கெட்டுப்போச்சு..." என்று அண்டங்காக்கா பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போதே ஒரு குஞ்சு காக்கா இடைமறித்து ஒரு கேள்வி கேட்டது.

"நம்ம காக்கா இனத்தை பத்தி மனுஷங்க கொஞ்சம் கூட நெனச்சே பார்க்கமாட்டாங்களா?! மரங்களை வெட்டுனா நாம பாதிக்கப்படுவோம்னு அவங்களுக்கு தெரியாதா?!" என்றது.

"வெரிகுட்! ரொம்ப நல்ல கேள்வி கேட்டாய். மனுஷங்க ரொம்ப மாறிட்டாங்க. அவங்களுக்கு நம்மளை போன்ற பறவைகளையும், பிற உயிரினங்களையும் பத்தியெல்லாம் யோசிக்க நேரமே கிடையாது. ஏன்னா, அவங்க வாழ்க்கை அசுரவேகத்துலதான் சுத்திக்கிட்டு இருக்கு. ஆனா, ஒண்ணு மட்டும் நிச்சயம். ஒரேயடியா மனுஷங்க நம்மளை மறந்துடலை. அது பத்தி ஒரு கதையே இருக்கு..." என்று கதை சொல்ல ஆரம்பித்தது அண்டங்காக்கா.

"கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி கருத்தழகு என்ற காக்கா வாழ்ந்துச்சு. தீனிக்காக ஒருநாள் ரொம்ப தூரம் போயிடுச்சு. அப்போ, அதுக்கு பயங்கரமான தாகம்! 'எங்காவது தண்ணி இருக்காதா!'என்று ஒரு கிராமத்தை சுத்தி சுத்தி பறந்துச்சு. ஒரு வீட்டுக்கு வெளியில பானையில கொஞ்சம் தண்ணி இருக்கறதை பார்த்து சந்தோஷப்பட்டுச்சு. ஆனா, பானையில இருந்த தண்ணி கொஞ்சமா இருந்துச்சு. காக்கையாலே குடிக்க முடியலை. அப்போ ஒரு 'பளீர்'ஐடியா பண்ணுச்சு.

கீழே கிடந்த கூழாங்கற்களையெல்லாம் ஒவ்வொண்னா பொறுக்கி பானைக்குள்ளே மெதுவா போட்டுச்சு. பானையில இருந்த தண்ணியும் மெல்ல மெல்ல பானையோட விளிம்புக்கு வந்துச்சு. அந்த தண்ணியும் சுத்தமானதா வடிகட்டினதா இருந்துச்சு.

காக்காவும் சந்தோஷமா தண்ணி குடிச்சுச்சு. காக்காவோட இந்த செயலை சில மக்கள் பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ, கருத்தழகு காக்காவின் அறிவுப்பூர்வமான செயலை பார்த்து ஆச்சர்யப்பட்டு போனாங்க.

'கருத்தழகு காக்கா மாதிரி எந்தவொரு விஷயத்திலும் விடாமுயற்சி இருக்கணும், தண்ணீரை சுத்தப்படுத்தி குடிக்கணும்'அப்படீங்கிற விஷயத்தை மனுஷங்க நம்மோட இனத்தை பார்த்து கத்துக்கிட்டாங்க. இதுக்கு நன்றி சொல்லும் விதமா, இறந்து போன அவங்களோட முன்னோர்களை நம் வடிவமா பார்க்கறாங்க. சில மனுஷங்க நம் இனத்துக்கு உணவு படைச்சுட்டுதான் அவங்களே சாப்பிடுவாங்க. காய்ச்சி வடிகட்டிய நீரை நம் கருத்தழகு காக்கை போல குடித்து உடலை சுத்தமாக பேணாமல் போனதால் வருகிற ஒருவித வலிப்புக்கு 'காக்கா வலிப்பு' என்றும் அழைக் கிறார்கள்" என்று என்று கதை சொல்லி முடித்தது அண்டங்காக்கா.

மேலும் குஞ்சு காகங்கள் உள்பட அனைத்து காகங்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்தை சொன்னது அண்டங் காக்கா.

"இப்போதெல்லாம் மனுஷங்க 'பாக்கெட் வாட்டர்’-தான் அதிகமாக பயன்படுத்துறாங்க. பாலித்தீன் பையில் இருக்கும் தண்ணீர் மிகவும் ஆபத்து. அதை நீங்கள் யாரும் குடிக்கக்கூடாது. அது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்" என்று ஒரு 'ஹெல்த் டிப்ஸ்'சொல்லிவிட்டு பறந்தது அண்டங்காக்கா.

இன்றைய ஸ்கூலில் பல விஷயங்களை தெரிந்து கொண்ட மகிழ்ச்சியில் குஞ்சு காகங்களும், மற்ற காகங்களும் குதூகலத்துடன் கூடுகளுக்கு பறந்தன.

-இரா.நடராசன்