குருவை மதிக்காவிட்டால்...



பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் செருப்புத் தைக்கும் குடும்பத்தில் ஒரு சிறு கிராமத்தில் அவதரித்தார். அவர் பெரியவராகித் தன் குலத்தொழிலைச் செய்து ஒரு சித்த யோகியை அணுகி அவரிடமிருந்து ஒரு அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொண்டார்.

அந்த மந்திரத்தைக் கொண்டு காய் காய்க்காத காலத்தில் கூட மாமரங்களில் மாம்பழங்களை வர வழைத்து அவற்றை விற்று வாழ்ந்து வந்தார். தினமும் காட்டிற்குப் போய் ஒரு மாமரத்தின் அருகே நின்று மந்திரம் ஓதியவாறே அவர் அதன் மீது நீரைத் தெளிக்க, அம்மரம் பழங்களாகக் கீழே உதிர்த்து விழச் செய்யும். இவ்வாறு போதிசத்வர் செய்வதை ஒருநாள் சுநிந்தன் என்ற அந்தண வாலிபன் பார்த்து விட்டான்.

அவன் எந்த வேலையும் செய்யாமல் தனக்குப் பணம் வந்து குவிந்து விட வேண்டும் என்று பகல் கனவு காண்பவன். அவன் போதிசத்வர் செய்த அற்புதத்தைக் கண்டதும் அவரிடம் இருந்து அந்த அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொண்டு விடுவது என அவன் தீர்மானித்து, அப்போது முதல் போதிசத்வருக்குப் பணிவிடைகள் செய்யலானான். கீழே விழுந்த பழங்களை எடுத்து மூட்டையாகக் கட்டி சுமந்து கொண்டு அவர் பின் நடந்து அவர் வீட்டில் கொண்டு போய் இறக்கினான். அவருடைய வீட்டு வேலைகளை விழுந்து விழுந்து செய்தான்.
 


 இதைக் கண்ட போதிசத்வர் தன் மனைவியிடம் “இவன் ஏன் இப்படி நமக்கு வேலை செய்கிறான் தெரியுமா? என்னிடமிருந்து அபூர்வ மந்திரத்தைக் கற்றுக் கொள்ளத் தான். இவன் அதனைக் கற்றுக் கொண்டாலும் வெகு சீக்கிரமே அதன் சக்தி இவனிடம் இல்லாமல் போய் விடும்” என்றார். அவரது மனைவி, “பாவம்! எப்படி மாடு போல நம் வீட்டில் உழைக்கிறான்! நீங்கள் அவனுக்கு மந்திரத்தை உபதேசித்து விடுங்கள். பலிப்பதும் பலிக்காததும் அவனவன் தலை எழுத்தைப் பொறுத்தது” என்றாள்.

போதிசத்வரும் தம் மனைவியின் வற்புறுத்தலின் பேரில் சுநிந்தனுக்கு அந்த அபூர்வ மந்திரத்தை உபதேசித்து “நீ இதனை யாரிடமிருந்து கற்றாய் என்ற ரகசியத்தை வெளியிடக் கூடாது. அப்படி வெளியிட்டால் மறுவினாடியே உனக்கு இந்த மந்திரம் பலிக்காது” என்றார்.

சுநிந்தனும் யாரிடமும் அந்த ரகசியத்தைக் கூறுவதில்லை என உறுதிமொழி அளித்து போதிசத்வரிடம் விடைபெற்றுக் கொண்டு சென்றான். அவன் தினமும் நிறைய மாம்பழங்களை மரங்களில் தான் உபதேசம் பெற்ற மந்திரத்தின் சக்தியால் வரவழைத்து அவற்றை விற்று, நிறைய பணம் அடைந்து வரலானான்.

இவ்வாறு சுநிந்தன் வரவழைத்து விற்ற மாம்பழங்களில் ஒன்று காசி மன்னனுக்குக் கிடைத்தது. அவன் மாம்பழக் காலமில்லாத காலத்தில் மிகப் பெரிய ருசியான மாம்பழம் கிடைத்தது கண்டு ஆச்சரியப்பட்டான். அத்தகைய பழம் எங்கே கிடைத்தது என விசாரிக்கலானான். சுநிந்தன் தான் அதனை விற்றவன் என்பதை அவன் தன் ஆட்களிடம்இருந்து தெரிந்து கொண்டான்.
அவன் உடனே சுநிந்தனை அழைத்து விசாரிக்கவே சுநிந்தனும் “என்னிடம் அபூர்வ மந்திரசக்தி உள்ளது. அதனால் இத்தகைய பழங்களை வரவழைக்கிறேன்” என்று ஜம்பம் அடித்துக் கூறினான். அரசனும் அந்த சக்தியைக் காண விரும்பவே சுநிந்தனும் பலர் முன்னிலையில் அரசனின் தோட்டத்திலுள்ள ஒரு மாமரத்தின் முன்போய் நின்று அதன் மீது நீரைத் தெளித்து மந்திரத்தை உச்சரித்தான். மறு வினாடியே அம்மரத்தில் மாம்பழங்கள் தோன்றி கீழே விழுந்தன.



இந்த அதிசயத்தைக் கண்டு காசி மன்னன் ஆச்சரியப்பட்டு “ஆகா! இந்த அற்புத மந்திரத்தை உனக்கு உபதேசித்த மகான் யார்? உடனே சொல்” என்று கேட்டான்.சுநிந்தன் முதலில் தான் அதனைக் கற்றது போதிசத்வரிடமிருந்து எனச் சொல்ல வேண்டாம் என நினைத்தான். ஆனால் அரசன் மீண்டும் மீண்டும் கேட்கவே, சுநிந்தனும் போதிசத்வர் எச்சரித்ததையும் பொருட்படுத்தாமல் தான் அந்த மந்திரத்தைக் கற்றது செருப்பு தைக்கும் குலத்தில் பிறந்த போதிசத்வரிடமிருந்து என்று கூறி விட்டான்.

இவ்வளவு சிரமப்பட்டு கற்ற மந்திரத்தின் சக்தி திடீரென்று தன்னை விட்டு விட்டுப் போய் விடவா போகிறது என அவன் எண்ணித் தன் குருவின் கட்டளையையும் மீறி ரகசியத்தை வெளியிட்டு விட்டான். காசி மன்னன் ஆச்சரியப்பட்டவாறே “அடேயப்பா! தாழ்குலத்தில் பிறந்த ஒருவனுக்கா இவ்வளவு சக்தி! பிராமணனாகிய நீ அவனிடம் உபதேசம் பெற்றது பற்றிக் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லையா?” என்று கேட்டான். சுநிந்தனும் பதில் எதுவும் கூறாமல் தலைகுனிந்தவாறே அங்கிருந்து சென்றான்.

ஓரிரண்டு மாதங்களாயின காசி மன்னனுக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. உடனே அவன் சுநிந்தனை அழைத்து வரச் சொன்னான். சுநிந்தன் வந்ததும் காசி மன்னன் அவனிடம் மந்திரத்தை உச்சரித்து முன் செய்தது போல இப்போதும் தனக்கு மாம்பழங்கள் வரவழைத்துக் கொடுக்கும்படிக் கூறினான். சுநிந்தனும் மிகவும் கர்வத்தோடு முன் போல அரசனின் தோட்டத்திற்குப் போனான். அவனோடு காசி மன்னனும் மற்றும் பலரும் சென்றார்கள்.

சுநிந்தனும் ஒரு மாமரத்தின் முன் நின்று அதன் மீது நீரைத் தெளித்து, மந்திரத்தை உச்சரிக்க முயன்றான். ஆனால் அவனுக்கு மந்திரமே ஞாபகத்திற்கு வரவில்லை. காசி மன்னனும் மற்றவர்களும் அது கண்டு ஆச்சரியப்பட்டனர்.

அப்போது சுநிந்தன் “நான் என் குருவின் கட்டளையை மீறினேன். நான் யாரிடமிருந்து இந்த மந்திரத்தைக் கற்றேன் என்ற ரகசியத்தைக் காசி மன்னனிடம் கூறினேன். அதனால் எனக்கு அப்போது முதல் மந்திரம் பலிக்காது போயிற்று” என்று எல்லாரிடமும் கூறி விட்டு தலைகுனிந்தவாறே தன் வீட்டிற்குச் சென்றான். குருவை மதிக்காததாலும், கர்வம் கொண்டதாலும் ஏற்பட்ட விளைவை எண்ணி, அவன் வாழ்நாள் முழுதும் வருந்தினான்.

0 comments: