வீட்டிற்குப் போ!
 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் அங்கு சேனகர் என்ற மாபெரும் யோகியாக போதிசத்வர் அவதரித்திருந்தார். அதே சமயம் அந்நகரை அடுத்து இருந்த ஒரு கிராமத்தில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு பிராமணன் இருந்தான்.
 
ஒருநாள் அவன் ஏதோ ஒரு ஊரில் பிச்சை வாங்கிக் கொண்டு காட்டு வழியே தன் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு அசŽர வாக்கு "பிராமணா! நீ இன்று வீட்டிற்குப் போகாமல் இருந்தால் இறந்து விடுவாய். நீ வீட்டிற்குப் போனாலோ உன் மனைவி இறப்பாள்" என்று கூறியது.
 
பிராமணன் சுற்றிலும் பார்த்து யாருமே இல்லாதது கண்டு தன்னை எச்சரித்தவன் யாராவது யட்சனோ கந்தர்வனோ அல்லது பிசாசோ என்று சந்தேகப் பட்டான். அவன் மனத்தில் பயம் ஏற்படவே எப்படியாவது சட்டென வீட்டிற்குப் போய் விட வேண்டும் என்று அவன் துடித்தான். ஆனால் வீட்டிற்குப் போனால் அவன் மனைவி இறந்து விடுவாளாமே. இந்த இக்கட்டான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் தவித்தான்.
 
 அவன் நகருக்குள் நுழைந்து ஒரு வீதி வழியாகப் போன போது சேனகரான போதிசத்வர் மக்களுக்கு தர்மோபதேசம் செய்து கொண்டுஇருப்பதைக் கண்டான். அவர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்க மக்கள் அவரைச் சுற்றிலும் கூடி இருந்தார்கள்.
 
இந்தப் பிராமணனும் கூட்ட த்தில் சேர்ந்து கொண்டு போதிசத்வர் கூறியதைக்   கேட்கலானான். போதிசத்வர் தம் பேச்சை முடித்ததும் மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.
ஆனால் அந்த பிராமணன் மட்டும் ஆடாமல் அசையாமல் மரம் போல நின்றான்.
 
அவனுக்குக் காட்டில் கேட்ட அசŽர வாக்கு மிகுந்த குழப்பத்தைத்தான் உண்டாக்கி இருந்தது. எப்படிப் பார்த்தாலும் கணவன் மனைவி இருவருள் யாராவது ஒருவர் இறந்தாக வேண்டும். இருவரும் இறக்காமல் இருக்க என்ன வழி என்று காணத்தான் அவன் துடித்தான்.
 
அவனைக் கண்ட போதிசத்வர் தன்னருகே வரும்படி அவனுக்குச் சைகை செய்தார். பிராமணனும் அவரருகே போய் அவரை வணங்கி எழுந்து தலை குனிந்து நின்றான். போதிசத்வரும் "நீ எதற்காக இப்போது வேதனைப் படுகிறாய்?" என்று கேட்டார். பிராமணனும் காட்டில் தன்னை யாரோ எச்சரித்ததைக் கூறி "இப்போது நான் என்ன செய்வேன்? வீட்டிற்குப் போனாலே என் மனைவி இறந்து விடுவாளாம். போகா விட்டாலோ நான் இறந்து விடுவேனாம். இருவரும் இறக்காமல் இருக்க ஏதாவது வழி கூறுங்கள்" என வேண்டினான். அப்போது போதிசத்வர் "நீ அந்த எச்சரிக்கையைக் கேட்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று கேட்டார். "நான் ஒரிடத்தில் உட்கார்ந்து பையிலிருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டேன்" என்றான்.
 
"சரி. உன்னிடம் உணவு உள்ள பை இருக்கிறது. ஆனால் நீர் குடிக்கப் பாத்திரம் எதுவும் இல்லையே. தண்ணீர் எப்படிக் குடித்தாய்?" என்று போதிசத்வர் கேட்டார். "எதிரே ஒரு ஆறு இருந்தது. அங்கு போய்த் தண்ணீர் குடித்து விட்டு வந்தேன்" என்றான் பிராமணன். "அப்படியானால் நீ உணவு சாப்பிட்டு விட்டு பையை அதே இடத்தில் விட்டு விட்டு ஆற்றிற்கு போனாய். அந்த பையில் உணவு மீதமாகி இருந்ததா?" என்று போதிசத்வர் அவனைப் பார்த்துக் கேட்டார்.
 
அவனும் "ஆமாம். பையில் இருந்ததில் பாதியை நான் உண்டேன். மிகுந்ததை கட்டி எடுத்துக் கொண்டு போய் மனைவியிடம் கொடுக்கப் போகிறேன். இதோ அந்தப் பை" என்று காட்டினான். "நீ நதிக்குப் போன போது பையின் வாயைக் கட்டவில்லையே" என போதிசத்வர் கேட்டார். "கட்டவில்லைதான்" எனப் பிராமணன் பதிலளித்தான். 
"அப்படியானால் நதியிலிருந்து திரும்பி வந்துதான் பையின் வாயைக் கட்டினாய். கட்டு முன் அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தாயா?" என்று அவர் கேட்டார். அவனும் "பார்க்கவில்லை. அப்படியே கட்டி எடுத்து வந்தேன். இதற்குப் பிறகுதான் என்னை எச்சரிக்கும் குரல் என் காதில் விழுந்தது" என்றான்.
 
போதிசத்வரும் "அப்படியானால் நீ ஆற்றில் போய்த் தண்ணீர் குடித்த போது பை இருந்த இடத்தில் ஏதோ நடத்திருக்கிறது. அநேகமாக ஒரு பாம்பு உன் பைக்குள் போயிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். அதை கவனித்த யட்சனோ தேவதையோ உன்னை எச்சரித்தது. நீ வீட்டிற்குப் போகாவிட்டால் மறுபடியும் பசிக்கும் போது பையைத் திறப்பாய். அப்போது அதிலிருக்கும் பாம்பு உன்னைத் தீண்டி விடும். நீயும் இறந்து போவாய். நீ பையைத் திறக்காமல் வீட்டிற்குப் போனால் முதலில் பையை உன் மனைவியிடம் தான் கொடுப்பாய். அவளும் அதை ஆவலுடன் திறப்பாள். அப்போது பாம்பு அவளைக் கடிக்க அவள் இறந்து விடுவாள். இது தான் விஷயம்" எனக் கூறி அப்பையைத் தான் உட்கார்ந்திருக்கும் இடத்தருகே வைக்கும்படி அந்த பிராம்மணனிடம் சொன்னார்.
 
பிராம்மணன் அப்போதுதான் தன் பைக்குள் பாம்பு புகுந்திருக்கிறது என அறிந்து திடுக்கிட்டான். போதிசத்வர் கூறியபடியே உடனேயே அவர் பக்கத்தில் வைத்து போதிசத்வர் என்ன செய்கிறார் எனப் பார்க்கலானான்.
 
அப்போது அவ்வழியே சென்ற ஒரு பாம்பாட்டியை அவர் கூப்பிட்டு பையிலுள்ள பாம்பைப் பிடிக்கச் சொன்னார். அவனும் பையின் வாயை அவிழ்த்து சீறி வந்த நல்ல பாம்பைப் பிடித்து கொண்டு போய் விட்டான்.
 
அதன் பிறகு போதிசத்வர் பிராமணனிடம் "நீ இனிமேல் பயமில்லாமல் உன் வீட்டிற்குப் போகலாம்" என்றார். பிராமணன் அவருக்குத் தன் நன்றியறிதலைத் தெரிவித்து, கவலையை விடுத்துத் தன் வீட்டிற்குச் சென்றான்.
 

0 comments: