கனவுகளின் பொருள் 
கோசல நாட்டு மன்னனான பிம்பிசாரன் ஒரு நாளிரவு பல விசித்திர பயங்கரக் கனவுகளைக் கண்டான். மறுநாள் பல பிராம்மணர்களை அழைத்து "நீங்கள் சகல சாஸ்திரங்களைக் கற்றவர்கள். நான் கண்ட கனவுகளின் பொருள் என்ன? அதனால் ஏற்படும் பலன் என்ன?" என்று கேட்டான்.
 
பிராம்மணர்களும் மன்னன் கண்ட கனவுகளைக் கேட்டனர். இதுதான் பணம் பறிக்கத் தக்க தருணம் என அவர்கள் எண்ணினர், "அரசே! இக்கனவுகளால் உங்களுக்கும் உங்கள் வம்சத்திற்கும் உங்கள் நாட்டிற்கும் விரைவில் கஷ்டம் வரப் போகிறது. ஆனால் அதைத் தடுக்கப் பரிகாரம் செய்தால் போதும். நாட்டில் நான்கு பாதைகள் கூடும் இடங்களில் எல்லாம் யாகங்கள் நடத்தி பிராம்மணர்களுக்கு அவர்கள் மனம் குளிர தானமும் தட்சிணையும் கொடுத்தால் எல்லாம் சரியாய்ப் போய்விடும்" என்றார்கள்.
 
அதைக் கேட்ட மன்னன் "சரி. மந்திரியிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம்" என்றான். தன் பொக்கிஷ அதிகாரியிடமும் தானதர்மத்திற்காகப் பணம் தனியாக எடுத்து வைக்கவும் கட்டளையிட்டான். இது ராணிக்குத் தெரிந்தது. பிராம்மணர்களின் பேராசையைப் புரிந்து கொண்ட அவள் மன்னனிடம் "நீங்கள் இவர்கள் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
இவர்களுக்கு அரைகுறை அறிவே உள்ளது. சுயநலம் காரணமாக இப்படி தான தர்மம் செய்யச் சொல்லி அவற்றை அடைய விரும்புகிறார்கள். ஜைதவனத்தில் புத்தர்பிரான் இருக்கிறார். அவரிடம் உங்கள் கனவுகளைக் கூறி அவற்றின் பலன்கள் பற்றிக் கேளுங்கள். அவர் உங்களுக்கு 
விவரமாக எல்லாவற்றையும் கூறுவார்" என்றாள்.
பிம்பிசாரனும் "நானே நேரடியாக ஜைதவனத்திற்குப் போய் அவரை தரிசித்து நம் அரண்மனையில் பிகைஷ ஏற்க வருமாறு வேண்டுகிறேன்" எனக்கூறி ஜைதவனத்திற்குச் சென்றான். புத்தரும், மன்னனின் அழைப்பை ஏற்று அவனது அரண்மனைக்கு வந்தார்.
 
மன்னனும் அவருக்குத் தக்கபடி உபசரித்து "ஐயனே, நான் சில கனவுகளைக் கண்டேன். அவற்றின் பலன்கள் என்ன என்று சொல்ல வேண்டும்" என வேண்டினான். புத்தரும் "நீ கண்ட கனவுகளைச் சொல். அவற்றின் பலன்களைக் கூறுகிறேன்" என்றார்.
 
பிம்பிசாரனும் "முதலாவது கனவில் நான்கு காளைகள் அரண்மனையை நோக்கி ஓடி வந்தன. அவை சண்டை போடுவதைக் கண்டு களிக்கலாம் என மக்கள் நினைத்துக் கூடினர். ஆனால் அவைகள் சண்டை போடாமல் நான்கு திசைகளில் பிரிந்து சென்றன. இதன் பொருள் என்னவோ? விளக்கமாக எனக்கு கூறுங்கள்" எனக் கேட்டான்.
 
புத்தரும் "மன்னா! இது உனக்கும் தற்கால நடப்பிற்கும் சம்மந்தப்பட்டதல்ல. பிற்காலத்தில் அரசர்கள் பாவங்களைப் புரிவார்கள். அப்போது கருமேகங்கள் வந்து மழை பெய்யப் போவது போல பிரமையை ஏற்படுத்திவிட்டு பெய்யாமல் போய்விடும். அவற்றின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை ஏமாற்றமாக முடியும்" என்றார்.
 
மன்னனும் "அடுத்த கனவில் மரம் செடிகள் அதிகம் உயராமல் குட்டையாகவே இருந்து மலர்ந்து காய்களைக் கொடுப்பதாகக் கண்டேன். இதன் ரகசியம் என்னவோ?" என்று கேட்டான்.
 
புத்தரும் "நான் முன்பே கூறியபடி வருங்காலத்தில் பாவங்கள் அதிகரிக்க பெண்கள் சிறுமிகளாக இருக்கையிலேயே மணம் புரிந்து கொண்டு பெரியவர்களாகுமுன்பே குழந்தைகளைப் பெற்று விடுவார்கள். இதுவே அக்கனவின் பொருள்" என்றார். "பசுமாடுகள் கன்றுகளிடமிருந்து பால் குடிப்பதாக இன்னொரு கனவையும் நான் கண்டேன்.
இதன் பொருள் என்னவோ?" என மன்னன் கூறவே புத்தரும் "கிழவர்கள் இளைஞர்களை நம்பி இருக்க வேண்டி வரும் என்பதே பொருள்" என்றார். "அடுத்து குடியானவர்கள் ஏர்களில் உள்ள முரட்டு எருதுகளை அவிழ்த்துவிட்டு அவற்றிற்குப் பதிலாகக் கன்றுக் குட்டிகளைக் கட்டுவதாகக் கனவு கண்டேன்" என மன்னன் கூறினான்.
 
புத்தரும் "நான் கூறிய பாவச் செயல் புரியும் மன்னர்கள் நல்ல மந்திரிகளைப் பதவியிலிருந்து விலக்கிவிட்டு அனுபவஞானமே இல்லாத இளைஞர்களை அப்பதவிகளில் அமர்த்துவார்கள். இதுதான் அக்கனவின் பொருள்" என்றார்.
 
"ஒருவன் கம்பளம் நேய்து கொண்டே இருக்க நேய்யாது கீழே கிடந்த பாகத்தை பெண் நரிகள் கடித்துத் தின்பதாக ஒரு கனவு கண்டேன்" என மன்னன் கூறவே புத்தரும் "வருங்காலத்தில் பாவம் அதிகரிக்கும். கணவன் சிரமப்பட்டு சம்பாதித்ததை மனைவி வீண் செலவு செய்வாள் என்பது பொருளாகும்" என்றார்.
 
"இரட்டைத் தலைக் குதிரை ஒன்று கொள்ளை தன் இருவாய்களாலும் சாப்பிடுவது போல ஒரு கனவு கண்டேன்" என மன்னன் சொல்லவே புத்தரும் "அரசாங்க வருமானத்தில் வருங்காலத்தில் அதிகாரிகள் சம்பளமும் பெற்றுக் கொண்டு லஞ்சமும் வாங்குவார்கள் என்பது இதன் பொருள்" என்றார்.
 
"அரண்மனை முன் ஒரு பெரிய குழியும் பல சிறிய குழிகள் இருப்பது போலவும் பெரிய குழியில் மட்டும் வழியவழியத் தண்ணீரை மக்கள் விடுவதையும் சிறிய குழிகளை கவனிக்காமல் இருப்பது போலவும் கனவு கண்டேன்" என்றான் மன்னன். புத்தரும் "மக்கள் சிரமப்பட்டு சம்பாதிப்பதை வருங்காலத்தில் அரசாங்க பொக்கிஷத்தில் நிரப்புவார்கள்.
 
ஆனால் மக்கள் வசதி எதுவும் பெறாமல் தம் வீடுகளில் பணம் இல்லாமல் தவிப்பார்கள்" என்றார். "ஒரு பாத்திரத்தில் சாதம் எல்லாப் பக்கத்திலும் ஒரே மாதிரி வேகாமல் ஒரு பக்கம் நன்கு வந்தும் வேறு பல பக்கங்களிலும் வேகாமல் இருப்பது போலவும் கண்டேன்" என பிம்பிசாரன் கூறினார். அதற்கு புத்தபிரான், "இது வருங்கால விவசாயம் பற்றியது.
நாட்டில் ஓரிடத்தில் நல்ல பயிர் விளைச்சலும் மற்ற பகுதிகளில் அறைகுறையான விளைச்சலுமே இருக்கும் எனக் காட்டுகிறது" என்று புத்தர் கூறினார். "மற்றொரு கனவு. அதில் நல்ல விலையுயர்ந்த சந்தனத்தைச் சிலர் தெருவில் விற்றுக் கொண்டு போவது போலக் கண்டேன்" என மன்னன் கூறவே புத்தரும்" வருங்காலத்தில் சில கயவர்கள் புனிதமான உபதேசங்களைத் தம் இஷ்டம் போலக்கூறி மிகவும் கேவலமான போக வாழ்க்கையை அடைவார்கள் என்பதே இதன் பொருள்" என்றார்.
 
"இன்னும் சில கனவுகள் பாறைகள் நீரில் மிதப்பது போலவும் அன்னப் பறவைகளின் கூட்டத்தில் காகம் சேர்ந்து நடப்பது போலவும் ஆடுகள் புலிகளை அடித்துக் கொன்று தின்பதும் அவற்றைக் கண்டு ஓநாய்கள் பயந்து நடுங்குவதும் நடப்பது போலக் கண்டேன். இவை என்ன கெடுதல்களைக் குறிக்கின்றனவோ?" என்று பிம்பிசாரன் பணிவுடன் கேட்டான்.
 
புத்தரும் "இவையெல்லாம் வருங்காலத்தில் விபŽத சம்பவங்கள் நிகழும் என்பதைக் காட்டுகின்றன. இவை உன் காலத்தில் ஏற்படாது. அது பற்றிக் கவலைப்பட வேண்டாம். வருங்காலத்தில் தர்மம் சீர்குலைந்து அதர்மம் மேலோங்க அப்போது நல்லவர்களெல்லாம் துன்பப்பட, கெட்டவர்கள் தலை நிமிர்ந்து நடப்பார்கள்.

 
நல்லவை நசிந்து தீயவை மேலோங்கி வரும். இதனைத் தான் நீ கூறியவை குறிக்கின்றன. இவை யாவும் நாட்டில் பாவம் அதிகரிக்கும் போது ஏற்படுபவை. நீ புண்ணியகாரியங்களைச் செய்து தர்மவழியில் நடந்து வருகிறாய். தொடர்ந்து இப்படியே இரு. உனக்கு எவ்வித பயமும் இல்லை உன் நாடும் சுபீட்சமாக இருக்கும்" என்றார்.
 
பிம்பிசாரனின் சந்தேகங்கள் தீர்ந்தன. அவன் மனத்தில் அநாவசியமாக பிராம்மணர்கள் தோற்றுவித்த பயம் ஒழிந்தது. எனவே அவன் யாகங்கள் செய்ய ஏற்பாடுகள் செய்வதை நிறுத்தி விட்டான். புத்தரது உபதேசங்களை ஏற்று அவரைத் தக்கபடி உபசரித்து அவரை ஜைதவனத்திற்குக் கொண்டு போய் விட்டு வந்தான்.

0 comments: