நவீன பஞ்சதந்திரக் கதை-18

ஓடியது பூனை... ஜெயித்தது ஆமை!

டாம் பூனையும், ஜெர்ரி எலியும் அடிக்கிற லூட்டிகள் உங்களுக்கு நன்றாகவே தெரியும். அன்றும் அப்படித்தான்... டாம் பூனைக்கு தட்டில் வைக்கப்பட்டிருந்த பாலை குடித்துக் கொண்டிருந்தது ஜெர்ரி எலி. அதை பார்த்த டாமுக்கு வந்ததே ஒரு 'மெகா' கோபம்...அவ்வளவுதான்!

ஒரே பாய்ச்சலில் ஜெர்ரி எலியை அமுக்க பாய்ந்தது. 'நல்லவேளை பிழைத்தோம்...தப்பித்தோம்' என்று நினைத்து தலைதெறிக்க ஓடியது ஜெர்ரி. ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரனை போல ஜெர்ரி ஓட, திருடனை பிடிக்கும் போலீசை போல டாம் அதை துரத்த... பல கிலோமீட்டர்களை கடந்து விட்டன. வேகமாக ஓடிய ஜெர்ரி பாறை போன்ற ஒன்றின் மீது 'டமாரென' மோதியது. பின் தொடர்ந்து வந்த டாமும் அதன் மீது மோதி கீழே விழுந்தது.

''டேய் ஜெர்ரி, இந்த இடத்தில் எப்படிடா பாறை வந்துச்சு?'' என்று பகை மறந்து விசாரித்தது டாம்.

''அதாண்ணே, நானும் யோசிக்கிறேன்'' என்று மூச்சிறைத்து கொண்டே பதில் சொன்னது ஜெர்ரி.

''யாரை பார்த்து பாறைன்னு சொல்றீங்க...'' என்று கம்பீரமாக முதுகை திருப்பி கேட்டது ஆமை.
''அட நம்ம ஆமையாரா! உன்னை முதுகு பக்கமாக பார்க்கும்போது சின்ன பாறை மாதிரியே இருந்தது'' என்று கிண்டலடித்தது டாம்.

''நீங்க மட்டும் என்ன? ரொம்ப அழகோ... உனக்கு நீளமான காது... அவனுக்கு கூன் விழுந்தது போல் முதுகு'' என்று டாம் பூனையையும், ஜெர்ரி எலியையும் சேர்த்து வைத்து பதிலடி கொடுத்தது ஆமை.

''ஏய், யாரை கிண்டலடிக்கிறே?! எங்க அண்ணன் டாமை பற்றி உனக்கு தெரியாது. ஓட்டப்பந்தயத்துல அவரு சூப்பர் ஸ்டாரு'' என்று ஆமையை வம்புக்கு இழுத்தது ஜெர்ரி எலி.

''என்னோட கதை உங்களுக்கு தெரியும்ல. ஓட்டப்பந்தயத்துல முயலையே ஓரங்கட்டியவன்'' என்று பெருமையடித்தது ஆமை.

''சரி, உன்னோட திறமைக்கு ஒரு சவால். உனக்கு தைரியம் இருந்தால் எங்க டாமுடன் மோதிப் பாரு'' என்று ஆமையை போட்டிக்கு அழைத்தது ஜெர்ரி.

''போட்டிக்கு நான் தயார். போட்டில நான் ஜெயிச்சுடுவேன். உங்க அண்ணன் தோத்துட்டா என்ன செய்வே?'' என்றது ஆமை.

''ஒருவேளை எங்க அண்ணன் தோத்துட்டா, அவரு ஒருவாரத்துக்கு பாலே குடிக்க மாட்டாரு...'' என்று டாமை மாட்டிவிட்டது ஜெர்ரி.

'ஆஹா, சமயம் பார்த்து நம்மளை சிக்கலில் மாட்டிவிடுறானே...' என்று நினைத்த டாம் பூனை, கோபப்பார்வையால் ஜெர்ரி எலியை முறைத்தது. அதை புரிந்து கொண்ட ஜெர்ரி, ''அண்ணே, கவலைப் படாதீங்க. உங்களோட திறமை உங்களுக்கே தெரியாது. ஓட்டப்பந்தயத்துல நீங்க சூரப்புலி'' என்று தைரியம் சொன்னது ஜெர்ரி.

''ஆமையாரே, நாங்கள் போட்டிக்கு தயார். நாளை காலை ஏழு மணிக்கு போட்டியை வெச்சுக்குவோம். நீயும் சீக்கிரமாக வந்துடு'' என்றது ஜெர்ரி.

அடுத்தநாள் காலை போட்டி நடக்கும் இடத்துக்கு இரண்டும் வந்து சேர்ந்தன. ஏற்கெனவே ஆமை வந்து காத்திருந்தது.

''ஆமையாரே, இங்கிருந்து போட்டியை தொடங்குவோம். அதோ அந்த இடத்துல இருக்குற சிவப்பு பூ பூத்திருக்குற மரத்து வரைக்கும் போகணும்'' என்று சொல்லி விட்டு கோடு போட்டது ஜெர்ரி எலி.

ஆமையும், டாமும் கோட்டின் மீது நின்றன. ஜெர்ரி நடுவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.

''ரெடி...1... 2... 3...'' போட்டியை ஆரம்பித்தது ஜெர்ரி. ஆமையும், டாமும் ஓட ஆரம்பித்தன. போட்டியில் ஜெயித்தாக வேண்டும் என்று ஓட்டம் பிடித்தது டாம். ஓடும் பாதை முழுவதிலும் ஒரு அடி உயரத்துக்கு புற்கள் வளர்ந்திருந்தன. இதனால், ஆமை எங்கு ஓடுகிறது, டாம் பூனை எங்கு ஓடுகிறது என்பது தெரியாமல் குழம்பி போயிருந்தது ஜெர்ரி எலி.

போட்டி முடியும் இடத்துக்கு வந்து சேர்ந்தது டாம் பூனை.

''என்ன டாம்?! ஏன், இவ்வளவு லேட். நான் வந்து அஞ்சு நிமிஷம் ஆச்சு'' என்று முதுகை திருப்பி சொன்னது ஆமை. ஆமையை கண்டு அதிர்ச்சியடைந்தது டாம்.

''நீ எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தே? நான் உன்னைவிட வேகமாகத்தானே வந்தேன்'' என்று குழப்பத்தில் கேட்டது டாம்.

''நாம் இருவரும் ஒன்றாகதானே ஓட ஆரம்பித்தோம். அப்புறமென்ன உனக்கு சந்தேகம்?'' என்றது ஆமை.

'இனி ஒரு வாரத்துக்கு பால் குடிக்க முடியாதே' என்று நினைத்து பயந்த டாம், ''ஆமையாரே, இங்கிருந்து போட்டி தொடங்கிய இடத்துக்கே மீண்டும் ஓடுவோம். இதில் யார் ஜெயிக்கிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்'' என்றது டாம் பூனை. அதற்கும் சம்மதித்தது ஆமை. ரேஸ் காரை போல மீண்டும் வேகமெடுத்தது டாம். ஆனால், போட்டி தொடங்கிய இடத்தில் ஜெர்ரிக்கு பக்கத்தில் காத்திருந்தது ஆமை. அதை கண்ட டாம் பூனைக்கு பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிட்டது. 'இனி ஒரு வாரத்துக்கு பால் குடிக்க முடியாதே' என்று வருந்தியது டாம்.

அப்போது பேசத் தொடங்கியது ஆமை.. ''டாம், கவலைப்படாதே! நீ தான் போட்டியில் ஜெயித்தாய். எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். நாங்கள் இருவருமே 'டுவின்ஸ்'. போட்டி தொடங்கியவுடன் சிறிது தூரத்திலே நான் நின்று கொண்டேன். போட்டி முடிந்த இடத்தில் என் தம்பிதான் இருந்தான். அவன்தான் உன்னை வரவேற்றான். அங்கிருந்து நீ மீண்டும் போட்டியை ஆரம்பிப்பாய் என்று நினைத்தோம். அதேமாதிரி நீயே மீண்டும் போட்டியை ஆரம்பித்தாய். அப்போது நான் இங்கு வந்து விட்டேன். அதோ பார் என் தம்பி வருகிறான்'' என்று கிழக்கு திசையை காட்டியது ஆமை. சற்று தொலைவில் இன்னொரு ஆமை வந்து கொண்டிருந்தது. மீண்டும் ஆமை பேசியது.

''டாம், நீ ஓடியதுதான் பள்ளிக்கூட கல்வி. நாங்கள் செய்தது சமயோஜித புத்தி. வெறும் பள்ளிக்கூட அறிவு மட்டும் போதாது. சமயோசித அறிவும் தேவை. எனவே பாடத்திற்கும் படிப்பிற்கும் வெளியேயும் நாம் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்'' என்று அறிவுறுத்தியது ஆமை.

ஆமை சொன்னதை டாமும், ஜெர்ரியும் கேட்டுக் கொண்டன. பின்னர் அனைவரும் நெருங்கிய நண்பர்களாயினர்.


0 comments: