சாத்தானின் சீடன்!

நோபல் பரிசு பெற்ற கதை!

ஞாயிற்றுக்கிழமை என்றால் நிச்சயம் அந்த பெண்ணை தேவாலயத்தில் பார்க்க முடியும். ஒருவாரம் கூட அவள் பிரார்த்தனைக்கு வராமல் இருந்ததில்லை. அவளது பெயர் அன்ஸி.

இறைவனை வழிபடுபவர்கள் என்றால் உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய எண்பது சதவீதம் பேர் இருப்பார்கள். மிச்சமிருக்கும் இருபது சதவீதம் பேரில் இறைநம்பிக்கை இல்லாதவர்கள், நம்பிக்கையிருந்தும் வழிபட விருப்பமில்லாதவர்கள் என்று எல்லோரையும் அடக்கிவிடலாம். ஆனால், சாத்தானை வழிபடுபவர்களை பற்றி கேள்விப்பட்டிருக் கிறீர்களா?!

இறைவன் என்பவர் அன்பு, கருணை என்று அத்தனை நற்குணங்களையும் கொண்டவர். அவரை வழிபடலாம். ஆனால் சாத்தானோ தீய குணங்களின் முழு வடிவம். அப்படியிருந்தும் கூட சாத்தானை ஒருவன் வழிபடுகிறான் என்றால் அவன் எவ்வளவு மோசமானவனாக இருப்பான்?

ரிச்சர்ட் என்ற இளைஞன் பகிரங்கமாகவே ‘நான் ஒரு சாத்தானின் சீடன்' என்று அறிவித்துக் கொண்டான்.

அந்த ரிச்சர்ட் வேறு யாருமில்லை. தீவிர தெய்வ பக்தையான அன்ஸியின் மகன். தாய் இறைவனையும், மகன் சாத்தானையும் வழிபடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு இடையே பாசமும் நேசமும் எப்படியிருக்கும்?!

இருவரும் பிரிந்துதான் வாழ்ந்தார்கள். இதற்கிடையில் ரிச்சர்டின் தந்தை திமோதி இறந்து போனார். அவரின் மரணச்செய்தியோடு மற்றொரு அதிர்ச்சியும் அன்ஸிக்காக காத்திருந்தது. திமோதி இறந்துபோவதற்கு முன்னர் தனது முழுச்சொத்தையும் ரிச்சர்டின் பெயரில் எழுதிவைத்துவிட்டார். எனவே அன்ஸி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டாள்.

ரிச்சர்டின் உறவினர்கள் அனைவருமே அவனை வெறுத்தனர். சமயகுருவான ஆன்டர்சன் மட்டுமே ரிச்சர்ட் மனம் திருந்தி வாழ்வான் என்று நம்பினார். அதேவேளையில், அவனது நடவடிக்கைகள் அரசுக்கு எதிரானவை என்று எண்ணிவிடுவார்களோ என்றும் பயந்தார்.

ரிச்சர்டை எச்சரிப்பதற்காக அவன் வீட்டுக்குப் போனார் ஆன்டர்சன். அவன் வீட்டில் இல்லை. உடனே தம்மை வந்து சந்திக்குமாறு கடிதம் எழுதிவைத்துவிட்டு திரும்பினார்.

அந்த காலகட்டத்தில், அரசுக்கு எதிராக யாராவது செயல்படுவதாக சந்தேகம் வந்தாலே போதும், உடனே சம்பந்தப்பட்ட நபருக்கு தூக்குத்தண்டனை கொடுத்து விடுவார்கள். ரிச்சர்டின் சமயவிரோத போக்கு வெளியே தெரிந்தால் ஆபத்துதானே?! எனவே ரிச்சர்ட் அடிக்கடி தன்னை வந்து பார்க்க வேண்டுமென்று ஆன்டர்சன் விரும் பினார்.

சமயகுருவை தொடர்ந்து சந்திக்கும் ஒருவன்மத விரோதியாக எப்படி இருக்க முடியும் என்று யோசிப் பார்கள் அல்லவா?! எப்படியோ, ரிச்சர்ட் உயிர் பிழைத்து வாழ்ந்தால் போதும், அவனை திருத்தி நல்வழிக்கு கொண்டு வந்துவிடலாம் என்று ஆன்டர்சன் உறுதியாக நம்பினார்.

கதவில் செருகியிருந்த கடித்தத்தை பார்த்துவிட்டு ரிச்சர்ட் சமயகுருவின் வீட்டிற்கு போனான். அவரது எச்சரிக்கைகளை அவன் காது கொடுத்து கேட்கவே இல்லை. வழக்கம்போல அலட்சியம் செய்தான்.

சமயகுரு ஆன்டர்சனும், ரிச்சர்டும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு ரிச்சர்டின் சகோதரன் கிறிஸ்டி வந்தான். அன்ஸியின் உடல்நலம் மோசமாக இருப்பதாகவும், அவன் சமயகுருவை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தான்.

தன்னை பெற்ற தாயின் உடல்நிலை சரியில்லை என்ற போதும் கூட அவளை சந்திக்க ரிச்சர்ட் விரும்பவில்லை. அவனை கொஞ்சநேரம் காத்திருக்குமாறு சொல்லிவிட்டு ஆன்டர்சன் கிறிஸ்டியோடு கிளம்பி போனார்.

கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது. ரிச்சர்ட் எழுந்துபோய் கதவை திறந்ததுதான் தாமதம். காவலர்கள் உள்ளே நுழைந்து அவனை சூழ்ந்துகொண்டார்கள்.

காவலர்களின் தலைவர் அவனை நெருங்கிவந்து "மதிப்பிற்குரிய ஆன்டர்சன் அவர்களே! அரசுக்கு எதிராக செயல்படு வருவதற்காக உங்களைக் கைது செய்கிறோம்' என்றார்.

உலகெங்கும் அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டுமென்று ஆன்டர்சன் ஆசைப்பட்டார். ஆனால் அதையும் கூட ராஜதுரோகம் என்று தவறாகக் கருதிவிட்டார்கள். அவர் செய்த சமூகப்பணிக்கு பரிசாக கிடைத்தது தூக்குத் தண்டனை மட்டும்தான்.

ஆனால் காவலர்கள் கைது செய்தது ஆன்டர்சனை அல்ல. அவரைத்தான் கிறிஸ்டி அழைத்துச் சென்றுவிட்டானே!

ரிச்சர்ட் தன்னை யாரென்று காட்டிக் கொள்ளவே இல்லை. ஆன்டர்சனின் அங்கியை அணிந்து கொண்டு காவலர்களோடு கிளம்பி விட்டான். சமயகுருக்கள் மட்டுமே அணியும் அங்கி அது. எனவே அவன்தான் ஆன்டர்சன் என்று காவலர்களும் நம்பிவிட்டார்கள்.

சாத்தானை வழிபடும் ஒருவன் மதகுருவை காப்பதற்காக தன்னுடைய உயிரை ஏன் இழக்க வேண்டும்?

ரிச்சர்ட் மனம் திருந்தி வாழ முற்பட்டான் என்பதுதான் உண்மை. அவனது இயல்பான பிடிவாத குணம் அந்த எண்ணத்தை தடுத்து கொண்டிருந்தது.

இப்போது தனது தீய இயல்புகள் அனைத்துக்கும் ஒரே நொடியில் விடை சொல்லிவிட்டான் ரிச்சர்ட். கூடவே தான் செய்த தவறுகள் அனைத்துக்குமான தண்டனையையும் விரும்பி ஏற்றுக்கொண்டான். அது அவனுக்கான தண்டனை இல்லை என்ற போதிலும்கூட...

ரிச்சர்ட் விசாரிக்கப்பட்டான். அதிகாரிகளால் அவன் செய்த ஆள் மாறாட்டத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ஆன்டர்சனின் மனைவி சூடியத் உண்மையை சொல்லி விட்டாள்.

இப்போது ரிச்சர்டின் மீது ஆள்மாறாட்டம் செய்தான் என்ற குற்றம் சுமத்தப்பட்டது. தண்டனை? மாற்றம் ஏதுமில்லை. தூக்குத் தண்டனை உறுதியாகிவிட்டது.

ரிச்சர்ட் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இதை வேடிக்கை பார்ப்பதற்காக பெருங்கூட்டமே கூடிவிட்டது. ரிச்சர்டை தூக்கிலிட்டு கொலை செய்யுமாறு அதிகாரி உத்தரவிட்டார். அதே நேரத்தில் "நிறுத்துங்கள்... நிறுத்துங்கள்'' என்று சத்தம் கேட்டது. எல்லோரும் சத்தம் வந்த திசைநோக்கி திரும்பினர்.

அங்கே ஆன்டர்சன் நின்று கொண்டிருந்தார். தான் குற்றமற்றவன் என்பதற்காக ஆதாரங்களை காட்டினார். தான் தப்பித்ததோடு மட்டுமின்றி ரிச்சர்டின் உயிரையும் காப்பாற்றினார்.

சாத்தானின் சீடன் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா? அமைதியை வலியுறுத்தி போதனை செய்து கொண்டிருக்கிறார்.

உலகில் மனிதனாக பிறந்த எவனும் நிச்சயம் கெட்டவனாக இருக்கமுடியாது. சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக அவன் மனம் மாறி தீய செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். திருந்தி வாழ வாய்ப்பு கொடுத்தால் அவனும் நல்லவன் ஆகிவிடுவான்.

இக்கதைக்கு சொந்தக்காரர் நாடக மேதையான பெர்னாட்ஷா. ‘சாத்தானின் சீடன்' என்ற தலைப்பில் அவர் எழுதிய நாடகத்தின் கதையே இது. பெர்னாட்ஷாவின் இலக்கிய பங்களிப்பை பாராட்டி அவருக்கு 1925-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.


0 comments: