சரியா....தப்பா?!

''டேய் விக்கி, நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்கே?! உன் நண்பன் ராகுல் எவ்வளவு 'ஸ்மார்ட்டா' இருக்கிறான். அவனை பார்த்து திருந்த முயற்சி செய்" - இது என் வீட்டுலையும், வகுப்பிலும் நான் அடிக்கடி கேட்கிற வசனம்!

அப்படி எந்த விதத்தில் ராகுலைவிட நான் குறைஞ்சு போயிட்டேன்னு எனக்கு தெரியலைங்க. நானும் ராகுல் செய்ற டெக்னிக்ஸை யூஸ் பண்ணி பார்க்கறேன். ஆனா, அவனை எல்லாரும் பாராட்டுறாங்க. என்னை மட்டும் திட்டுறாங்க.

ஒருநாள் விளையாட்டு வகுப்பின் போது ராகுலுக்கும், கௌதமுக்கும் சரியான சண்டை! இந்த கௌதம் இருக்குறானே, அவன் எப்பவும் எல்லாரையும் திட்டிக்கிட்டே இருப்பான். அன்றைக்கும் ராகுலைப் பார்த்து 'சப்பை மூக்கு'ன்னு செல்லிட்டான். உடனே, ராகுல் என்ன செஞ்சான் தெரியுமா? டீச்சர்கிட்ட போய், ''உங்களை 'சப்பை மூக்கு' ன்னு கௌதம் சொல்றான்"ன்னு மாட்டி விட்டுட்டான்.

டீச்சரும், டென்ஷனாகி கௌதமை கூப்பிட்டு பள்ளியில் இருக்குற செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊத்தச் சொல்லிட்டாங்க. இந்த சம்பவத்துக்கு பிறகு கௌதம் யாரையுமே திட்டுவதில்லை. இது தெரிஞ்சு ராகுலோட 'ஸ்மார்ட்னெஸ்ஸை' வகுப்பில் எல்லோரும் பாராட்டினாங்க. இன்னொரு நாள் வருண் என்னை கீழே தள்ளி விட்டுட்டான். உடனே நானும், ராகுல் மாதிரியே டீச்சர்கிட்டே போய், ''டீச்சர், உங்களை வருண் கீழே தள்ளி விட்டுட்டான்"-னு சொன்னேன். டீச்சர், என்னை ஒரு நிமிஷம் முறைச்சுப் பார்த்தாங்க. ''நான் வேணா வருணை கூப்பிடட்டா டீச்சர்?" என்று திரும்பினேன். டீச்சர், என்னை பக்கத்தில் வரச்சொல்லி என் காதை திருகி கிரவுண்டில் கிடக்கும் குப்பை பேப்பர் எல்லாத்தையும் பொறுக்க வைச்சிட்டாங்க.

நீங்களே சொல்லுங்க, நான் செஞ்சது தப்பா?! நானும் ராகுல் மாதிரிதானே செஞ்சேன், பின்னர் ஏன் டீச்சர் எனக்கு மட்டும் தண்டனை கொடுத்தாங்க. ஒண்ணுமே புரியலையே! உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்களேன்!


0 comments: