ராம் பத்து வயது பையன். அன்று பௌர்ணமி... அந்த பௌர்ணமி நிலா, மல்லிகைப் பூவை போல வெண்மையாகவும், அம்மா வைக்கும் நெற்றி பொட்டை போல் வட்டமாகவும் கள்ளம் கபடமற்று சிரித்தது. ராம், தன் செல்ல நாய்க் குட்டியுடன் இரவில் அந்த சாலையில் நடந்து சென்றான். அப்போது அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது. 'இவ்வளவு வெளிச்சமாக அழகாக இருக்கும் நிலா, அடுத்த பதினைந்து நாட்களிலேயே கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து இருட்டாகி விடுகிறதே..! ஏன்? கடவுள் நிலாவை, சூரியனைப் போல் தினமும் ஏன் ஒளிர விடவில்லை? நிலா, எல்லா நாட்களும் வெளிச்சமாக இருந்தால், நன்றாக இருக்குமே..?' என்று எண்ணினான். அப்போது அந்த பக்கமாக ஒரு முதியவர் தட்டுத்தடுமாறி செல்வதை கவனித்தான். அவரிடம் பேசினான். ''தாத்தா, உங்களுடன் துணைக்கு ஒருவரை கூட்டிக் கொண்டு வர வேண்டியது தானே?" என்றான். ''என் பேரனை காலையில் இருந்து காணவில்லை. அவனைதான் தேடிக்கிட்டு இருக்கிறேன். அதனாலதான் இருட்டு என்று கூட பார்க்காமல் அவனை தேடிக் கொண்டு வந்தேன்" என்றார். ''தாத்தா என்ன சொல்றீங்க?! நல்லா வெளிச்சமாகத்தானே இருக்கிறது..." என்றான் ராம். ''எனக்கு மாலைக்கண் நோய் இருக்குது. ஆறு மணிக்கு மேல் எனக்கு கண் தெரியாது. அதற்கு பிறகு எல்லாமே எனக்கு இருட்டுதான்" என்று தழுதழுத்த குரலில் சொன்னார் தாத்தா. ''கவலைப்படாதீங்க தாத்தா, உங்க பேரனை கண்டுபிடிக்க நான் உதவி செய்கிறேன். நாளை காலையில் இரண்டு பேரும் சேர்ந்தே அவனை தேடலாம். ஆனால், தாத்தா எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம். அதை தீர்த்து வைப்பீங்களா?!" என்றான் ராம். ''கேளுப்பா..." என்றார் தாத்தா. ''தாத்தா, நிலா தினமும் வெளிச்சமாக இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். ஆனால், ஏன் 15 நாட்களில் நிலவு இருட்டாவது போல் இறைவன் படைத்து விட்டார். இதுதான் எனக்கு புரியவில்லை" என்றான். 'தம்பி, எங்களை போன்ற மாலைக்கண் நோய் உள்ளவர்களுக்கும் இந்த நிலவு வாழ்க்கைதான்! அதை சக மனிதர்கள் உணருவதற்காகதான் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை நிலவிலும் இந்த இருட்டு&வெளிச்சப் பாடம்! ஒரு மனிதன் வெளிச்சத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால் அதனால் விரைவில் அவன் கண் கெட்டுப்போகும். நடுவில் இருட்டு வந்து போனால்தான் வெளிச்சத்தின் அருமை புரியும். அதுபோல, வெற்றியையே சந்திக்கும் ஒருவன் தோல்வியையும் சந்தித்தால்தான், மீண்டும் உத்வேகத்துடன் நினைத்ததை அவனால் அடைய முடியும். இருட்டை உணர்ந்தால்தான் வாழ்க்கை பயணமும் இனிதாய் அமையும்" என்றார் தாத்தா. சந்தேகம் தீர்ந்த சந்தோஷத்தில் பௌர்ணமி நிலவு போல் ராம் முகம் மலர்ந்தது.
கதை -இருட்டு!
Friday, October 9, 2009 at 9:14 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment