நவீன பஞ்சதந்திரக் கதை-20

எறும்பு எக்ஸ்பிரஸ்!
அந்த ரயில் எங்குமே நிற்காது... புற்றிலிருந்து கிளம்பினால் நேரே உணவு இருக்கும் இடம் எவ்வளவு தூரமென்றாலும் சரி 'கூ..கூ... சிக்கு... புக்கு.... சூப்பர்ஃபாஸ்ட்... உணவை தேடி கண்டுபிடித்து... பிறகு உணவை எடுத்து கொண்டு மீண்டும் புற்றை நோக்கி திரும்பும் எறும்பு எக்ஸ்பிரஸ்!

பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் அதே தான் என்ன ஒரு வேகம்..! வழியில் யாராவது குறுக்கே போனால்... அவ்வளவுதான் சிக்கு... புக்கு... உடம்பெல்லாம் ஊசி போட்டு பிடுங்கிவிடும்.

அன்று அந்த எறும்பு எக்ஸ்பிரஸ் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. "சீக்கிரம், ம்..." ராணியாரின் கட்டளைக்குரல் கேட்டுகொண்டே இருந்தது.

"மழைக்காலம் நெருங்கிவிட்டது. இன்னும் புற்றில் நிறைய வேலைகள் இருக்கிறது" என்று பரபரத்து கொண்டிருந்தது. ஏற்கெனவே பல்வேறு தானிய அறைகள் நிரம்பி இருந்தாலும் மேலும் மேலும் எறும்பு எக்ஸ்பிரஸில் உணவுகள் கொண்டு வரப்பட்டு அறைகள் அனைத்தும் தொடர்ந்து நிரப்பப்பட்டு கொண்டேயிருந்தன. பரபரப்புடன் எறும்புகள் இயங்கி கொண்டிருந்தன. அப்போது ஒரு ஜூனியர் எறும்பு மட்டும் ராணியாரை நோக்கி ஒரு கேள்வியுடன் சென்றது.

"மன்னிக்க வேண்டும் ராணியாரே! உங்களிடம் ஒரு முக்கிய கோரிக்கை" என்றது.

தன் முன் நின்று கொண்டிருந்த ஜூனியர் எறும்பை பார்த்த ராணியார் புன்னகைத்தார்...

"மம்... என்ன?" ஆனால் குரலில் மட்டும் கொஞ்சம் கடுமை.

"ராணியார் அவர்களே, ஏற்கெனவே புற்றில் எக்கச்சக்கமாக உணவு கையிருப்பாக இருக்கிறது..." என்றது பேச்சை இழுத்தது ஜூனியர் எறும்பு.

"அது எனக்கும் தெரியும்... அதிகப் பிரசங்கி..." என்று ஆரம்பத்திலேயே குட்டு வைத்தார் ராணியார்.

"இ... இல்லை... மன்னிச்சுடுங்க" என்று ஜூனியர் சமாளிப்பதற்குள், அங்கு மற்ற ஜுனியர் எறும்புகளின் கூட்டமே கூடிவிட்டதையும் ராணியார் கவனிக்க தவறவில்லை.

"ஏன் மேலும் மேலும் தானிய உணவு வந்துகொண்டே இருக்கவேண்டும்... கொஞ்சம் 'ரெஸ்ட்’ எடுக்கலாமே. நாங்க விளையாடக்கூட அனுமதிக்கப் படுவது இல்லை. எங்க அப்பா அம்மாவுக்கு எக்ஸ்பிரஸ் ஓட்ட உதவி செய்தே பொழுதுபோய்விடுகிறது..." என்று கேள்வியை ஒரு வழியாக கேட்டே விட்டது அந்த ஜூனியர் எறும்பு.

"இருப்பதை சாப்பிட்டுவிட்டு பிறகு மறுபடியும் உணவு தேடலாமே?" இது இன்னொரு ஜூனியரின் தைரியக்குரல்.

"அன்பு எறும்புக்குழந்தைகளே..." ராணியார் பரிவுடன் பேசத் தொடங்கினார்.

"நாம் எறும்பு இனத்தை சேர்ந்தவர்கள். மனிதர்களுக்கே சுறுசுறுப்பை கற்றுக்கொடுத் தவர்கள் நாம்தான். உழைக்கும் நேரத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்... அப்போதுதான் ஓய்வுநேரத்தில் நிம்மதியாக இருக்க முடியும். உங்களுக்கு விளக்கமாக ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்" என்று கதை சொல்ல ஆரம்பித்தது ராணியார்கள். ஜூனியர் எறும்புகளும் கதை கேட்க தயாராகின.

"ஒரு காலத்தில் நம் எறும்பு ராஜாவை பார்த்து வெட்டுக்கிளி ஒன்று கேலி செய்தது.

'நான் ஜாலியாக இருக்கிறேன்.ஆனால், நீ மட்டும் எப்போது பார்த்தாலும் உழைத்து கொண்டே இருக்கிறாய். உனக்கே இது அசிங்கமாக இல்லையா..." என்று கூறி பரிகாசித்தது. ஆனால் அதை பொருட் படுத்தாமல் நம் எறும்பு ராஜா உழைத்து உழைத்து புற்றில் உணவு சேர்த்து கொண்டேயிருந்தார்.

ஒருநாள் கடும் மழை பெய்தது. குளிரும் அடித்தது. இதனால் வெட்டுக்கிளி மிகவும் அவதிப்பட்டது. நம் எறும்பு ராஜாவிடம் வந்து, "எறும்பு ராஜா, கொஞ்சம் வெளியே வாருங்கள்" என்று அழைத்தது. வெளியில் வந்த எறும்பு ராஜா, "ராஜா என்று இங்கு யாருமில்லை. எல்லோருமே உழைப்பாளிகள்தான்" என்றது.

"வெளியில் பயங்கர மழையாக இருக்கிறது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. நான்கு நாட்களாக நான் பட்டினி... ஆமாம், நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?!" என்றது வெட்டுக்கிளி.

"மழைக்காலத்துக்கு முன்பு உழைத்து சேர்த்ததை இப்போது சாப்பிட்டு ஓய்வாக நிம்மதியாக இருக்கிறேன்" என்றது எறும்பு ராஜா. எறும்பு கூட்டத்தில் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறு வெட்டுக்கிளி எவ்வளவோ கெஞ்சியது. ஆனால், எறும்பு ராஜா மறுத்துவிட்டார்.

இந்த கதையை தான் மனிதர்கள் பள்ளியிலும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்" என்று கதை சொல்லி முடித்தது ராணியார். வேறு எதுவும் பேசாமல் ஜூனியர் எறும்புகள் எக்ஸ்பிரஸ் ரயிலை வேகமாக விரட்டி சென்றன.

1 comments:

  Unknown

October 25, 2009 at 11:53 PM

முதல் முறையாக உங்களுடைய பதிவினைப் படிக்கிறேன். நல்லா இருக்கு... தொடருங்கள்.

கிருஷ்ண பிரபு.